மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது அவர்:-
கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவர்களின் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை கருதி தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என மறுக்கிறது. அப்படி என்றால் இந்தியா கடற்படை சுட்டதா? சீன கடற்படை மீனவரை சுட்டு இருந்தால் இந்தியாவுக்கும் பெரும் ஆபத்து உள்ளது.
இந்திய பெருங்கடலையும், இந்தியாவை காக்கும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. இந்தியாவுக்கு நட்பு நாடு என்று சொல்லிக் கொள்ளும் இலங்கை அரசு மீனவர்களை சுடுகிறது. நமது மீனவர்களை படகுகளை மீட்க முடியவில்லை. ஆனால் போர்க்கப்பல்களை மட்டும் இந்திய அரசு, இலங்கைக்கு விற்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது தற்போதைய மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கச்சத்தீவு மீட்போம் என்று கூறினார். இதுவரை 843 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு உள்ளார்கள். தமிழக மீனவருக்கு நிதி வழங்கவில்லை. எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் மீனவர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆர்கேநகர் தொகுதியில் தூய அரசியலை நடத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்.
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.