சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69490 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிரப்பித்தது. இந்நிலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69490 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் வரை போதிய மழையின்மையால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவியது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டன. அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாரி, அவற்றில் அதிக அளவு தண்ணீர் சேமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் வலியுறுத்தினர். இதற்காக நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, தூர் வாரும் பணியில் அரசுடன், பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டன.
இதேப்போன்று மழைநீரை முறையாகச் சேமிக்காததும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கட்டிடங்களுக்கு உரிமம் பெற மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு அவசியம் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டது.
சென்னையைப் பொறுத்தவரையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
சென்னையில் சிறிய வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள், மால்கள், தியேட்டர்கள், தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 12.5 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இந்நிலையில் 38, 507 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பைச் சீரமைக்க, அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 1, 62, 284 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளதாகவும் மழைநீர் சேகரிப்பால், சென்னையில் சுமார் 4 அடி அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் சென்னை மாநராட்சி தெரிவித்துள்ளது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் விளைவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், மற்ற இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69490 கட்டிட உரிமையாளர்களுக்கு தற்போது தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.