நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை திமுக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள ‘குதிரை பேர’ ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது என்பதற்கு இன்று நடைபெற்றுள்ள சம்பவமே தெளிவான சாட்சியமாக அமைந்திருக்கின்றது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளித்திட வேண்டும் என்பதற்காக சட்ட மன்றத்தில் இரு மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டும், அந்த மசோதாக்கள் ஜனாதிபதி அவர்களுக்குச் சென்று சேரவில்லை. ஆனால் தமிழக அரசு, இதுதொடர்பாக நாங்கள் பிரதமரையும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி வருகிறோம் என்று ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதே கோரிக்கையை முன் வைத்து திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் இதில் ஒத்த கருத்துடைய பல்வேறு கட்சிகள் சேர்ந்து தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் தற்போது குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய குறிக்கோள், நோக்கமெல்லாம் என்னவென்று கேட்டால், மத்திய பிஜேபி ஆட்சியின் காலில் விழுந்து, சரணாகதி அடைந்து, அவர்கள் மீதுள்ள வருமான வரித்துறையின் வழக்குகள், தேர்தல் கமிஷன் போட்டுள்ள வழக்குகள், குட்கா தொடர்பான வழக்கு, அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களே தவிர, வேறொன்றுமல்ல.
நீட் தேர்வுக்கு விலக்கு விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம் என கூறி, மாணவர்களை ஏமாற்ற தமிழக அரசு கபட நாடகம் நடத்துகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.