தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2019, 01:20 PM IST
தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு title=

சென்னை: இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு "நீட் தகுதித் தேர்வை" மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த 3 ஆண்டுகளாக சிபிஎஸ்சி நிறுவனத்தால் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. 

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. 

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு தேர்வு நிறைவு பெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வு எழுத 550 மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

இந்தநிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

அனைத்து தமிழக மாணவ மாணவிகளுக்கும் தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளைய உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை, இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News