சென்னை: வர்தா புயல் கடந்து 2 வாரங்கள் கடந்து விட்ட நிலையில், சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. இதற்கான எந்த முயற்சியையும் மாநகராட்சி செய்யவில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு வாரங்கள் நெருங்கி விட்ட நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வர்தா புயல் பாதிப்பிற்குள்ளான பொதுமக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பது வேதனைக்குரியது. குறிப்பாக சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் கூட முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் செயல்படாமல் முடங்கி போயுள்ளது. அதிமுக அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போது வருமான வரித்துறையின் சோதனை நடைபெறுமோ என்ற அச்சத்தில், வர்தா புயல் பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காமல், செயலற்ற நிலையில் உள்ளனர்.
அதிமுக அரசு விரைவாக செயல்பட்டு, வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.