சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு மே 7 ஆம் தேதி பதவி ஏற்றது. மிகவும் நெருக்கடியான கொரோனா காலத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது அரசு. முறையாக பொறுப்பேற்கும் முன்னரே சில முக்கிய முடிவுகளை முன்வைத்தது திமுக. ஏழாம் தேதி நடந்த பதவி ஏற்பு விழாவும் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் அமைதியாகவே நடந்து முடிந்து, உடனடியாக அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கியது புதிதாக கோட்டையைப் பிடித்த தமிழக அரசு.
கொரோனா நெருக்கடி ஒருபுறம் கழுத்தை பிடிக்க, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக-வின் முதல் கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என பலரும் கூர்ந்து கவனித்தனர். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இல்லாத திமுக-வின் ஆட்சி எப்படி இருக்கும்? முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் நிர்வாகம் எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகள் பலர் மனதில் நிலைகொண்டிருந்த நிலையில், முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
வழக்கமாக, ஒரு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் நிலைமையை புரிந்து, சுதாரித்து, பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சில நாட்கள் ஆகும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு அந்த அவகாசம் கிடைக்கவில்லை. கொரோனா தொற்றின் கொடூரம் பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்த நிலையில், முதல் நாள் முதலே பல முக்கிய முடிவுகளை அரசு எடுத்தது. இவற்றில் பல முடிவுகளும் நடவடிக்கைகளும் பலரால் வியந்து பாராட்டப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று பத்து நாட்கள் ஆகியுள்ள நிலையில், 10 நாட்களில் அவர்கள் எடுத்துள்ள சில முக்கிய நடவடிக்கைகளை இங்கே காணலாம்.
- முழு ஊரடங்கு
கொரோனா வரவலைத் தடுக்கும் மிக முக்கிய முயற்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மே 10 முதல் மே 24 வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கை (Lockdown) அறிவித்தது. பலவித கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்த அரசு, முழு முனைப்புடன் அதை கண்காணிக்கவும் செய்தது. மக்கள் ஊரடங்கை ஒழுங்காக பின்பற்றவில்லை என்பதை அறிந்த அரசு, மே 14 ஆம் தேதி மேலும் பல தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்தது.
- கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (War Room)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிர்வாகம் கண்காணித்து செயல்படவும், கொரோனா தொற்று, மருத்துவ வசதிகள் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளவும் இந்த மையம் உருவாக்கப்பட்டது. 104 என்ற எண் மூலம் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம். இங்கு தொடர்பு கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
- கொரோனா நிவாரண நிதி
திமுக-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாயை சனிக்கிழமை (15-5-21) முதல் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை 10 ஆம் தெதியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் தவணையை அளிக்கத் தொடங்கியதற்காக பொது மக்கள் அரசை பாராட்டி வருகின்றனர்.
- ஆல் பாஸ் முக்கியமல்ல, மாணவர்களின் எதிர்காலமே முக்கியம்: பொதுத் தேர்வுகள் குறித்த தெளிவான அறிக்கை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரக்ளுக்கான பொதுத்தேர்வு ஆகியவை பற்றி ஆலோசிக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே 12 அன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார். இந்த ஆண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும், கண்டிப்பாக ரத்து செய்யப்படாது என்று கூறினார் கல்வித்துறை அமைச்சர். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தவுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்றார் அவர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டதால், மாணவர்கள் மனதில் தேர்வுகள் நடக்குமா நடக்காதா என்று இருந்த சந்தேகத்திற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.
- பொது மக்கள் / வெளிநாடு வாழ் தமிழகர்கள் / பிரபலங்களிடம் கொரோனா நிவாரண நிதிக்கான கோரிக்கை
கொரோனா தடுப்பு பணிகளுக்கு தங்களாலான உதவிகளை செய்யுமாறு தமிழக முதல்வர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, "உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள்" என்று கூறி வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் நிதியுதவி கோரினார். முதல்வரின் கோரிக்கையின் பேரில் பல்வேறு தரப்பிலிருந்து கொரோனா நிவாரண நிதிக்கான நன்கொடைகள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகுமார், எஸ்.ஆர்.எம் குழுமம், அதிமுக என பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
- தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டர்
தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்தவும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், தற்போதைய தடுப்பூசி (Vaccine) இருப்பு போதாது என்பதை உணர்ந்த தமிழக அரசு, உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. இதற்காக, 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கொரோனா பெருந்தொற்று உச்சியில் இருக்கும்போது ஆட்சிப்பொற்றுப்பேற்ற திமுக அரசு, அதைக் கண்டு துவண்டு விடாமல், முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், தொற்றின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக தினமும் அதிகரித்துக்கொண்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்க அரசு ஆயிரம் நடவடிக்கைகளை எடுத்தாலும் மக்கள் அதை உணர்ந்து வழிகாட்டுதல்களை பின்பற்றாத வரையில் நிலைமை மாறாது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ALSO READ: DMK Food Donation: கொரோனா நோயாளிகளுக்கு ஆலய அன்னதான திட்டம் விரிவாக்கம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR