பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20 ஆம் தேதி திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று திருக்கல்யாணம் நடந்த நிலையில், தற்போது பிப்ரவரி 28 ஆம் தேதி அதாவது இன்று திருத்தேரோட்டம் நடைபெறயுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் (Arulmigu Mariamman Temple, Palani) மிகவும் முக்கியமான உவ கோயிலாக விளங்கி வருவது அருள்மிகு மாரியம்மன் கோயிலாகும். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுபட்டு கிராம மக்களின் மிக பிரதான கோயிலாக அந்த கோயில் உள்ளது.
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு முகூர்த்தக்கால் நடுலுடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. மேலும் திருக்கம்பத்துக்கு காணியாளர் அரிவாள் எடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து ராமநாதநகர் அருகே இருந்த ஆலமரத்தில் இருந்து கம்பத்துக்காக திரிசூல வடிவிலான கம்பம் வெட்டி எடுக்கப்பட்டது. இதன் பின்னர் கம்பமானது வையாபுரிக் கண்மாய் அரமசரத்து வினாயகர் படித்துறையில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கம்பம் சாட்டுவதற்கான உத்திரவு கிடைத்ததைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நான்கு ரதவீதியில் வலம் வர செய்யப்பட்டு மாரியம்மன் கோயில் முன்பு அதிகாலை மூன்று மணிக்கு சாட்டப்பட்டது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மிப்பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரிசூல வடிவிலான கம்பத்துக்கு பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் இந்த கம்பத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால், பன்னீர், மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். பழனி மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பூவோடு, தீச்சட்டி ஏந்தியும், மாறுவேடங்கள் பூண்டும் அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தினர்.
இந்நிலையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவவிழாவை முன்னிட்டு நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அப்போது அருள்மிகு மாரியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16வகை பொருட்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபச்சாரமும் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பின்னர் பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கும், திருக்கம்பத்துக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொறிதல் ரத ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பலவண்ண மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பூச்சொறிதல் ரதத்தின் உள்ளே அருள்மிகு மாரியம்மன் சிவசக்தி குடும்பமாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ரத ஊர்வலம் சன்னதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடை வீதி வழியாக அருள்மிகு மாரியம்மன் கோயிலை அடைந்து நிறைவு பெற்றது. தேரின் முன்பாக செண்டை மேளம், நாதஸ்வரம், தவில் என மேளதாளங்கள் முழங்கியபடி சென்றது. வழிநெடுக தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனிடையே இன்று மாலை மாசித் தேரோட்டம் நடைபெறுகிறது. நள்ளிரவு சக்தி கரகம் வந்தவுடன் வியாழக்கிழமை அதிகாலை திருக்கம்பம் கங்கையில் சோ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
மேலும் படிக்க | மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரார்த்தனை: பிரதமர் மோடி மகிழ்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ