மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புத்தக கடை, அலங்கார பொருட்கள் கடை, உட்பட பல கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், கிழக்கு கோபுரம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, கிழக்கு கோபுர பகுதியில் இருந்த சுமார் 35 கடை முதல் 40 கடைகள் தீயில் கருகியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது:- இந்த தீவிபத்தில் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்தினால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதில் எந்த விதமான பாதிப்பு இருக்காது, வழக்கமான முறையில் தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதியளிக்கப்படும்
இந்த தீ விபத்தில் வீரவசந்தராய மண்டபம் மட்டுமே சேதமடைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபம் உட்பட, மற்ற கட்டடங்கள், பலமாக ஸ்திரத்தன்மையுடன் உள்ளன. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.