நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க மறுப்பு தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள நளினி, தனது மகள் திருமணம் காரணமாக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நளினிக்கு ஒரு மாதம் பரோல் அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 25-ஆம் தேதி முதல் பரோலில் வந்த அவர், மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தற்போது அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி, நளினி தரப்பில் இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பரோல் நீட்டிப்பு வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், பரோல் நீட்டிப்பு வழங்க மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தனது மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.