கடந்த 30-ம் தேதி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜ.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தீர்ப்பு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். தந்தையின் இறுதிச் சடங்கில் பேராசியர் ஜெயராமன் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று நீதிபதி நிஷாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேராசிரியர் ஜெயராமனுக்கு வருகிற 26-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.