காவிரி பாசனப் பகுதிகளில் பயிர்களை அழித்து குழாய்ப் பாதை அமைப்பதா?

காவிரி பாசனப் பகுதிகளில் பயிர்களை அழித்து குழாய்ப் பாதை அமைப்பதா? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கண்டனம்!

Last Updated : May 18, 2019, 11:52 AM IST
காவிரி பாசனப் பகுதிகளில் பயிர்களை அழித்து குழாய்ப் பாதை அமைப்பதா? title=

காவிரி பாசனப் பகுதிகளில் பயிர்களை அழித்து குழாய்ப் பாதை அமைப்பதா? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கண்டனம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி,  குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் - ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அதிக எண்ணிக்கையில் எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்தது. அங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை நரிமனத்திலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சீர்காழியை அடுத்த மாதானத்தில் இருந்து தரங்கம்பாடி அருகிலுள்ள மேமாத்தூர் வரையிலான 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்ப் பாதை அமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி - கெயில் நிறுவனங்கள் திடீரென இறங்கியுள்ளன. குழாய்ப் பாதை முழுக்க முழுக்க விளை நிலங்களில் அமைக்கப்படுகிறது. அந்த விளைநிலங்களில் அண்மையில் தான் குறுவை நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை அழித்து விட்டு குழாய்ப்பாதையை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடவு நட்ட பயிர்களை அழிக்க வேண்டாம் என்று உழவர்கள் கெஞ்சினாலும், போராடினாலும் கூட, அவற்றைப் பற்றி கவலைப்படாமல் இராட்சத எந்திரங்களின் மூலம் பணிகளை தொடர்கின்றன. இதைக் கண்டித்து குழாய்ப்பாதை அமைக்கப்பட உள்ள 29 கி.மீ நெடுகிலும் உள்ள விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உழவர்கள் தங்களின் வயல்களை மிகவும் புனிதமாக கருதுபவர்கள். குறுவை பருவ நெற்பயிரை நடவு நட்டு விட்டால் அவற்றை தங்களின் குழந்தைகளைப் போல அதிக பாசத்துடன் பராமரிப்பார்கள். அந்த பயிர்கள் தான் நாளைய நமது உணவை சுமந்து நிற்கும் கடவுளின் கருணைக் கருவிகளாகும். ஆனால், இத்தகைய உணர்வுகள் எதுவும் இல்லாமல் ஓ.என்.ஜி.சி & கெயில் நிறுவனங்களின் அதிகாரிகள் எந்திரமாக மாறி, உண்மையான எந்திரங்களின் உதவியுடன் பயிர்களை அழிப்பது மன்னிக்க முடியாததாகும். சில இடங்களில் உழவர்களின் கடுமையான போராட்டத்தினால் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட, மற்ற இடங்களில் இந்த பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

ஓ.என்.ஜி.சி & கெயில் நிறுவனங்களின் செயல் உழவை அழிக்கும் செயல் என்பது ஒருபுறமிருக்க, மிகப்பெரிய நம்பிக்கை துரோகமும் ஆகும். மாதானம் பகுதியில்  6 ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கிணறுகள் தோட்டப்பட்ட போது உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அந்த பகுதியில் கூடுதலாக கிணறுகள் தோண்டப்படாது என்றும், கச்சா எண்ணெய் சரக்குந்து மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்படும்; அதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு,  இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கூடுதலாக 7 எண்ணெய்க் கிணறுகளை அமைத்தது. இப்போது அடுத்தக்கட்டமாக, இரண்டாவது வாக்குறுதியையும் மீறி, பயிரிடப்பட்ட நிலங்களை எண்ணெய் நிறுவனங்கள் துண்டாடுகின்றன.

கடந்த ஆண்டே இதற்கான முயற்சிகளில் ஓ.என்.ஜி.சி - கெயில் நிறுவனங்கள் ஈடுபட்ட போது, அதை பாமக கடுமையாக எதிர்த்தது. இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும் என்று 18.03.2018 அன்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து இந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த எண்ணெய் நிறுவனங்கள், இப்போது மீண்டும் தொடங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரம்  விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணெய்  குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண்மை வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும். ஏற்கனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5,000 சதுர கி.மீ பரப்பளவில் 6 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலம், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என உழவை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சிய நிலங்களையும் சீரழிக்க குழாய்ப்பாதை திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது. இப்படி உழவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதை விட உழவர்கள் என்ற இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்து விடலாம்.

கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை குழாய்ப்பாதை அமைப்பது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

 

Trending News