புதுடெல்லி: இந்தியாவில் தூய்மையான புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. அதற்க்கான விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் பெற்றுக்கொண்டார்.
மத்திய அரசின் தூய இந்தியா இயக்க (Swachh Bharat) திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நாடு முழுவதும் முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் பராமரிப்பு, தூய்மை, சுகாதாரம் போன்றவற்றை கண்காணித்து, அதற்கு சிறந்த விருதுக்கள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய தூய்மையான சுகாதாரம் நிறைந்த புனித தலங்கள் உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 10 முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்து, அதன் தூய்மை, சுகாதாரம் குறித்து கண்காணித்து வந்தது.
மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணிகளை மதுரை மாநகராட்சி மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டனர். அவர்களின் முயற்ச்சியால் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் சுமார் 25 நவீன மின்னணு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்புரவு பணிக்கு பணியாளர்கள். கோவில் சுற்று பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை. பக்தர்களின் பயன்பாட்டிற்காக 5 பேட்டரி வாகனங்கள். 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரங்கள். நவீன மண் கூட்டும் இயந்திரம் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவில் தூய்மையான புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் இடம் பெற்றது.