ஓட்டுப்போட லீவு... ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Public Holiday On April 19: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 19ஆம் தேதி அன்று பொது விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 4, 2024, 09:48 PM IST
  • இந்த அறிவிப்பை தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.
  • ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
  • தபால் வாக்குகள் பெறும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.
ஓட்டுப்போட லீவு... ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு title=

Public Holiday On April 19 Election Date: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்குமான தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 4ஆம் தேதிதான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி முதல் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. மார்ச் 30ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டது. 

களத்தில் 950 வேட்பாளர்கள்

அன்றே இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகி உள்ளது. மொத்தம் 1085 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மார்ச் 30ஆம் தேதி வெளியான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி மொத்தம் 950 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதாவது 135 வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க | Amit Shah: அமித் ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து... காரணம் என்ன?

இந்த 950 வேட்பாளர்களில் 874 பேர் ஆண்கள் மற்றும் 76 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் கூட போட்டியிடவில்லை. கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 56 வேட்பாளர்களும், நாகப்பட்டினம் தொகுதியில் குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பலதரப்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 

தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் கடும் பாதுகாப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகியவற்றை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மட்டும் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றத்திற்குரியவை என்றும் அதில் மதுரை தொகுதியில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றத்திற்குரியவை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியின் 39 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் தெரிவித்துள்ளார். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று முதல் தபால் வாக்குகளை பெறும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், வரும் ஏப். 18ஆம் தேதிக்குள் தபால் வாக்குகள் முழுமையாக பெறப்படும். அதேபோல், 80 வயதுக்கும் மேலானவர்களின் வீட்டிற்கு சென்று தபால் வாக்குகளை பெறும் பணிகள் ஏப். 18ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால் ஏப். 17ஆம் தேதியுடன் பிரச்சாரங்கள் நிறைவடையும் என தெரிகிறது. 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து ஏப். 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில்,"இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், நூலகங்கள் ஆகியவை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பாசிச சக்திகளுக்கு எதிரான தேர்தலில்.. இந்தியா கூட்டணி வெல்லட்டும்! ஜனநாயகம் மலரட்டும்! -கனிமொழி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News