கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகக் கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்?
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது... "ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை இன்று முதல் விலகத் தொடங்கி உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலூர், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகக் கூடும் என தெரிவித்துள்ளது.