பாஜக தேசியச் செயலாளராக எச்.ராஜா தொடர்ந்து திராவிடத்தையும், பெரியாரையும் தாக்கி பேசி வருகிறார். இவர் கூறிய கருத்துக்கள் பலமுறை பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மீண்டும் தந்தை பெரியார் மற்றும் மணியம்மை பற்றி பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்த எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், ஈவேரா பற்றியும் மணியம்மை பற்றியும் படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? யோசிக்க வேண்டாமா? அவர்களை குறித்த பாடத்தை புத்தகத்திலிருந்து எடுக்க வேண்டும் எனக் கூறினார். இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எச்.ராஜாவின் கருத்துக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
"எச். இராஜாவைப் போன்றவர்கள் மீண்டும், மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். தந்தைப் பெரியாரின் கொள்கைகள் சிறப்பானவை. தமிழ் சமுதாயத்துக்கு அவசியமானவை. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் கூட சமுதாயத்துக்கு பொருந்தக்கூடியவை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை!
தந்தைப் பெரியாரின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அவற்றிலிருந்து எச்.இராசா போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன!
தந்தை பெரியார் பற்றி பள்ளிப் பாடநூலில் பாடம் இடம்பெற்றிருப்பது குறித்து பாஜக தேசியச் செயலர் எச்.இராசா கூறியுள்ள கருத்துகள் அவதூறானவை; இரசனைக்குறைவானவை; கண்டிக்கத் தக்கவை!"
இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.