ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 4, 2022, 10:53 AM IST
  • முதலமைச்சர் Vs ஆளுநர் ?
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் தலையிடும் ஆளுநர்கள்!
  • ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா ? ஆளுநரின் அதிகாரங்கள் என்ன ?
ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..! title=

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் தற்போது அதிகம் உரையாடப்படும் கேள்வி என்னவென்றால், ஒரு மாநிலத்திற்கு இன்னும் ஆளுநர் எதற்கு ? என்ற கேள்விதான் அது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் பல மாநிலங்களில் ஆளுநர் தலையீடு அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த சூழலில்தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு ? என்ற கேள்வியில் இருந்து பல மாநிலங்களில் விவாதங்களை தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மாநிலத்திற்கு ஆளுநரின் தேவையை குறிப்பிடும் வகையில் அன்றே பேரறிஞர் அண்ணா சொன்ன ஒரு சொலவடை இப்போதும் புழக்கத்தில் உண்டு. ‘ஆட்டுக்குத் தாடி எதற்கு ? ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு ?’ என்ற சொலவடை சட்டமன்றத்தில் மேற்கோள்காட்டி பேசும் அளவுக்கு தமிழகத்தில் பிரச்சித்தம். மேற்குவங்கம், டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கும், ஆளும் அரசுக்குமான அதிகார மோதல் வெளிப்படையாகவே இருந்துவந்தன. அதுவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நீக்க வலியுறுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி தெருவில் இறங்கிப் போராடும் அளவுக்கு பிரச்சனை வெடித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் ஒரு ஆளுநர் தலையிடலாமா ? ஒரு ஆளுநரின் அதிகார வரம்புதான் என்ன ? போன்ற கேள்விகள் குறித்து பல்வேறு சட்ட ரீதியான கருத்துகள் நிலவி வருகின்றன. 

மேலும் படிக்க | நீட் தேர்வு விலக்கு - மறுபரிசீலனை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு கோரிக்கை!

சரி, தமிழ்நாட்டு நிலவரம் எப்படி இருக்கிறது?!. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி பதவியேற்றார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கேரளாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை தடுக்கும் பணியிலும் இருந்தவர். பதவியேற்ற நாளில் இருந்தே ஆளுநர் ரவி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. ஏனெனில், தமிழகத்தின் மிக முக்கியமான நீட் தேர்வு ரத்து மசோதா, எழுவர் விடுதலை தொடர்பான மசோதாக்கள் அவரது கையில் இருந்தன. இதில், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து மசோதாவை ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டாரா என்ற கேள்வி தமிழ்நாடு முழுக்க இருந்தது. அதேபோல், எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலில் ஆளுநர் ரவி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒருபக்கம் இருந்தது. ஆனால் இந்த இரு விவகாரங்களிலும் ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. 

மேலும் படிக்க |7 பேரின் விடுதலை குறித்து ஆளுனரிடம் அழுத்தம் கொடுக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர்!

ஆளுநரின் செயல்பாடு எந்த வகையில் இருக்கப்போகிறது என்ற யூகிக்கும் வகையில் சுதந்திர தின விழா ஆளுநர் அறிக்கையில் ஒரு முக்கியமான வரியை ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில், நீட் தேர்வுக்கு பிறகு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேருவதாக கூறியிருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. தமிழக அரசு சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ரவியின் முதல் சர்ச்சை விவகாரம் இது.!

இதற்குப் பிறகு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு ரத்து மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி விளக்கம் அளித்திருந்தார்.  நீட் தேர்வு அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும் ஆளுநர் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்குப் பிறகு மீண்டும் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூடி, தமிழக அரசு சார்பாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் எனவும், ஆளுநரின் அதிகாரத்தை திருத்தம் செய்திட வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானத்தை திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘The Dravidian Model’ என்ற நூலை பரிசாக அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | நான் அவமானமாக உணர்கிறேன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் சோகம்

இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவன் இல்லத்தில் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்றது. இதற்காக உதகை ராஜ் பவனின் சுவற்றுக்கு வெள்ளை வர்ணம் பூசிவிட்டார். 145 ஆண்டு காலம் பழமை வாய்ந்த உதகை ராஜ்பவன் தற்போது வெள்ளை நிறத்தில் காட்சியளித்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக பசுமை நிறத்தில் காணப்பட்ட உதகை ராஜ்பவன், வெண்மை நிறத்திற்கு மாற்றப்பட்ட சர்ச்சை விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

இதன்பின்னர், மார்ச் 30ஆம் தேதியன்று தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று ஆளுநர் ரவி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பேசிய அவர், சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல என்று குறிப்பிட்டார். அதனை 'டார்வினியன் மாடல்' என்று குறிப்பிட்ட ஆளுநர், "சில புத்திகூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | நீட் தேர்வு விலக்கு மசோதாவா.? கை விரிக்கும் மத்திய அரசு..!

பிரதமர் மோடியின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல் என்பது உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், சமையல் எரிவாயு, ஆரோக்கியமான குடிமக்களுக்கான எல்லா அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை எல்லோருக்கும் பாகுபாடின்றி அளிப்பதுதான் என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார். இதுமட்டுமல்லாமல், நாம் அனைவரும் தேசிய அளவிலான பார்வையை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். மாநில ரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி சமமான வளர்ச்சியை உருவாக்காது. மாநில அளவிலான வளர்ச்சி நம் நாட்டுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும்." என்று பேசியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான தி.மு.க. முன்வைத்துவரும் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்திற்கு பதிலடியாக சொல்லப்பட்டதா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பி வருகின்றனர். ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பத்திரிக்கை, தலையங்கம் எழுதி தாக்கியுள்ளது. அதில், ‘திராவிட மாடல் என ஒன்று உருவாவதென்பது பா.ஜ.கவுக்கு சிக்கலாக இருக்கிறது. அந்தப் பின்னணியில்தான் ஆளுநர் பேசுகிறார். அவர் 'நீட்' மசோதாவுக்கு மட்டுமல்ல, பல்வேறு விஷயங்களில் அப்படித்தான் செயல்படுகிறார். தமிழ்நாடு அரசு ஒட்டுமொத்தமாகவே செயல்படாமல் இருக்க வேண்டும். அதுதான் அவரது விருப்பம்’ என்று பதிவிட்டுள்ளது. 

மேலும் படிக்க | நீட் விலக்கு சட்டம்: விடிவு எப்போது?- ராமதாஸ் கேள்வி

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இந்த கருத்து மோதல் இருந்து வந்தாலும், நேற்று ஆளுநர் ரவியின் பிறந்த நாளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனாலும், தொடர்ந்து ஆளுநர் உரைகளில் சர்ச்சையாக பேசுவதும், தமிழக அரசு அதற்கு பதிலடி தருவதும் என தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News