தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்க 2வது அரசாணை வெளியீடு!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதியில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுடன் சேர்த்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், தீவிரம் காட்டி வரும் மாநில தேர்தல் ஆணையம், இதற்கான வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மேலும் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1200 முதல் 2400 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2400 பேருக்கு மேல் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாநகராட்சிகளில் 1400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.