மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்ன் அளவு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது!
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. செவ்வாய்கிழமை காலை விநாடிக்கு 1,07,064 கனஅடியாக இருந்த நீர்வரத்து, கடந்த புதன் அன்று காலை விநாடிக்கு 1,04,436 கனஅடியாக குறைந்தது.
இதனையடத்து அன்று இரவே அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி-யாக அதிகரித்தது. ஓரிரு நாளில் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முதற்கட்டமாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும், நீர் இருப்பு 81.33 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1,01,277 கனஅடியிலிருந்து 59954 கன அடியாக குறைந்துள்ளது.