“3 ஏக்கர் வச்சிருந்தும் முதல் போட வழியில்ல, விவசாயத்தை தவிர வேற எதுவும் தெரியாது…. மண்ணு விஷமாச்சு, மகசூலு மலடாச்சு…காட விக்கறதா, நாம சாவறதாங்கற போராட்டத்துல தான் வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சந்திச்சேன். என்னோட வாழ்க்கையையே திருப்பி போட்டது இந்த நிறுவனம்தான்…விவசாயமே வேண்டாம் சாமின்னு நினைச்சது போக, வெளிநாட்டுல வேலை பார்த்துக்கிட்டு இருக்கற என்னோட மகன் இன்னிக்கு நானும் விவசாயிதாம்மா….விவசாயம் தான் நம்மோட மூச்சுக்காத்து….அதத்தான் செய்வேன் என சொல்றத கேக்கறச்சே….பிறந்த பலனை அடைஞ்சிட்டோம்னு தோணுச்சு” எனக்கூறும் நளினி அக்கா, புலுவப்பட்டி பகுதியின் பெண் விவசாயி. பெண்கள் விவசாயக் கூலித் தொழிலாளிகள் என்ற நிலையை மாற்றி அவர்களுக்கு விவசாயிகள் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது, வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
சமீபத்தில், உத்திரப்பிரதேசத்தில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியில் பாரதப் பிரதமரின் பாரட்டைப் பெற்றதுதான் இந்த வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். இந்தியாவின் மிகச்சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்று அவுட்லுக் பத்திரிக்கை இதற்கு விருது வழங்கியுள்ளது.
எப்படி இது சாத்தியமாயிற்று என்ற வினாவிற்கு, விடையளிக்கிறார் அதன் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட்ராஜா அவர்கள். “வறட்சியினால, விவசாயிகளோட தற்கொலை சாவுகள் அதிகமான சூழல். பெரிய விவசாயிகளே திண்டாட்டத்துல இருந்த நிலைமையில சிறு,குறு விவசாயிகள் முதலீடு இல்லாமலும், உருட்டி, புரட்டி முதலீடு போட்டு பொருள் உற்பத்தி பண்ணினப்புறம் அத விக்கமுடியாம, சந்தைக்கு அடிமாட்டு விலைக்கு விக்கற நிலைமை தான் இருந்தது.
ALSO READ | ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய கோரிய வழக்கை நிராகரித்தது NGT..!!!
அப்பத்தான், 2013 வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை ஈஷா நிறுவனத்தோட உதவியோட ஆரம்பிச்சோம். எப்பவுமே பிரச்சனையை பேசி, அதோட அங்கமாக மாறி, புதைஞ்சு போற நிலையை மாத்தணும். நாமே, விவசாயியே அதுக்கு தீர்வாக மாறணும் என்ற நோக்கத்துல உருவானது தான் இந்த வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். பல கிராமங்கள் அலைஞ்சு, சிறு,குறு விவசாயிகளை ஒருங்கிணைச்சு விளைவிக்கிறதுலேர்ந்து, விலை நிர்ணயம் பண்றது வரைக்கு எல்லாவற்றையும் விவசாயியே தீர்மானிக்கற நிலையை கொண்டுவந்தோம்.
சில பத்து விவசாயிகளோட 2013-ல் தொடங்கினபோது 45 ஆயிரம் லாபத்தை மட்டுமே ஈட்டிய இந்த நிறுவனம் 6 வருஷத்துல 12 கோடி லாபம் சம்பாதிக்கும் நிறுவனமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு ஆலமரமாக வளர்ந்திருக்கு” என்கிறார் வெங்கட்ராஜா.
முதலில் தென்னை விவசாயிகளின் துயர் துடைக்க தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று பாக்கு, காய்கறி, இயற்கை விவசாயம் மூலம் கொண்டு விளைவிக்கும் தேங்காயிலிருந்து தயாரிக்கும் சல்பர் இல்லாத தேங்காய் எண்ணெய், செக்கு எண்ணைகள், காய்கறி உற்பத்தி, கரும்பு, வாழை, மஞ்சள் என பல்வேறு பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு கற்பக விருட்சமாக மாறி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் வீறுநடை போட்டு வருகிறது.
ALSO READ | ஈஷாவின் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற விவசாயிகள்
“மட்டைக்கு காசுங்கறத எங்க வாழ்க்கைல நாங்க பார்த்ததே இந்த வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துனால தாங்க” எனக் கூறும் கிட்டுசாமி, ஒரு தென்னை விவசாயி. “தென்னையை பொறுத்த வரைக்கும் 60 நாளுக்குள்ள சந்தைக்கு கொண்டு போகணும். காசு பார்த்தாதான் வாழ்க்கைங்கற நிலைமைல தான் 2 ஏக்கருக்கு எச்சமா வச்சுருக்கற சிறு விவசாயிகளோட வாழ்க்கை இருந்துச்சுங்க தேங்காய் அறுக்கறது, காய் எண்றது, லோடு கொண்டு போய் சந்தைக்கு சேர்க்கறது என எல்லாத்துலயும் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் லாபம் சம்பாதிப்பாங்க. விவசாயிகளுக்கு அடிமாட்டு விலைகூட கிடைக்காதுங்க.
காய் எண்ணும் போது, 1 விவசாயி 5 பேரு காய் எண்ணுவாங்கன்னா, ஒண்ணு, இரண்டு,…ஐம்பது அப்படின்னு எண்ணிட்டே இருக்கும் போது, எம்பதுன்னு வர்ற இடத்துல, திரும்பியும் அம்பதுன்னு எண்ணுவாங்க. இதத்தவிர, நூத்துக்கு இரண்டு காய் லாபக்காய். அதுமட்டும் இல்லீங்க….காய்ல பெரிசு, சிறுசுன்னு தரம் பிரிச்சுடுவாங்க. அப்ப எல்லாம், காய்க்குத்தான் காசு. பெரிசு 25 ரூபாக்கு எடுத்தாங்கன்னா, 2 சின்னகாய், இல்லைன்னா 3 சின்னகாய்க்கு 25 ரூபான்னு பேரம் பேசுவாங்க. கூட்டி, கழிச்சு பார்த்தா முதலுக்கே மோசமான நிலைமைல இருந்தோங்க. அப்பத்தான், வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வந்து, விவசாயிகள் எல்லாம் ஒண்ணு கூடி ஏன் விலை நிர்ணயிக்கறதுலேர்ந்து, சந்தைக்கு கொண்டு போய் விக்கறது வரை நம்ம கன்ட்ரோல கொண்டு வரக்கூடாதுன்னு பேசுனாங்க.
ஆரம்பத்துல எங்களுக்குள்ளயே ஒத்துமை இல்லீங்க. இதென்னடா, இப்பவர்ற காசையும் இவங்க கெடுத்துடுவாங்க போல இருக்கே, அப்படின்னு பயந்தாங்க. இதுக்கிடையல வழக்கமா எங்ககிட்ட பொருள் வாங்கற வியாபாரிங்களும், வெளி ஆட்கள் உள்ளவர்ற அனுமதிக்கல…ரொம்ப கஷ்டமா இருந்த போது தான் ஈஷா எங்களுக்கு கை கொடுத்தாங்க. அரசு மானியம் வாங்கித் தரதுலேர்ந்து, சந்தைப்படுத்தறது வரைக்கும், ஈஷாக்கு மக்கள் கிட்ட இருந்த நம்பிக்கையை மூலதனமாக்கி, வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் எங்களோட வாழ்க்கைக்கு விளக்கேத்தி வச்சாங்க” என்று தங்களது வாழ்வாதாரம் வளர்ந்த கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார் கிட்டுசாமி.
ALSO READ | “மரம் நட விரும்பு” – மர ஆர்வலர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் ஈஷா..!
விவசாயிகள் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகியவர்கள். விருந்தோம்பல் கிராமத்தின் இயல்பான வழக்கம். அப்படியிருக்க, நுகர்வோர் சந்தையின் நுணுக்கங்களை அறியாத அவர்கள், தங்கள் உழைப்பிற்கான நியாயமான ஊதியத்தை இழந்து நின்ற சூழலில், அவர்களது சோதனைகளை, வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், அதில் பெருமளவு சாதனை படைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
விவசாயிகளுக்கு அரசு மானியங்கள், கடன்கள் வாங்கித் தருவது என்பதைத் தாண்டி, அவர்கள் பயிருக்கு என்ன உரம் போட வேண்டும், மண்ணின் தன்மை குறித்து விழிப்புணர்வு அளிப்பது என்பதற்கான ஒரு நிபுணர் குழுவையும் உருவாக்கி உள்ளது இந்த நிறுவனம். விளைவிப்பது மட்டும் தான் விவசாயியின் வேலை, அதனை அறுப்பது தொடங்கி, விற்பது வரை அனைத்தையும் தனது தோள்களில் சுமந்து கொண்டு, விவசாயிக்கு அளிக்க வேண்டிய தொகையை ஓரே வாரத்தில் அவர்களுடைய வங்கிகணக்கில் சேர்க்க வேண்டிய வேலையையும் தங்களது கடமையாகச் செய்யும் வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தொண்டாமத்தூர் ஒன்றிய விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது மிகையில்லை.
“முன்னாடி எல்லாம் யார்கிட்டயாவது பேசணும்னாலே கூச்சமா இருக்கும். தெரிஞ்சத சொல்லறதுக்கு கூட பயப்படுவோங்க. எங்ககாடு உண்டு, நாங்க உண்டு அப்படின்னு இருந்த நாங்க, இப்ப எங்க போனாலும் பயமில்லாம பேசுவோம். என்ன தேவையோ, அத அரசு நிறுவனத்துல, வங்கில எங்கயும் போய் சாதிச்சுட்டு வந்துருவோங்க. எங்க பிரச்சனையை நாங்களே பேசி, தீர்வு காண முடியுது….சாதிச்சுட்டோங்கற உணர்வு இருக்குங்க” எனக் கூறும் நளினி, வாழை, கரும்பு சாகுபடி செய்யும் பெண் விவசாயி.
“பூச்சிமருந்து போட்டு மண்ணு மலாடிக் கிடந்த நேரத்துல, 3 ஏக்கர்ல ஒரு ஏக்கர் மட்டும் நாங்க சொல்ற மாதிரி பயிர் வச்சு பாருங்கம்மான்னு வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சொன்னாங்க. மாடு இல்லாம நாங்க ஒரு நாளும் இருந்ததில்லீங்க. அதோட மூத்திரமும், சாணமும் இத்தனை பெரிய மருந்துன்னு தெரியாமலே இருந்திருக்கோங்கறது, அவங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு.
மாடு வால தூக்கிச்சுனாலே டப்பா எடுத்துட்டு ஓடுவோம். மூத்திரத்தை சாணத்தோட புளிக்கவச்சு, ஜீவாம்ருத கரைசலை மட்டும் உரமாக்கி 1 ஏக்கர் வாழை பயிர் பண்ணினோம். மத்த இரண்டு ஏக்கரும் எப்பவும் பண்ற மாதிரி பண்ணினோம். அப்ப எங்களுக்கு இவங்க சொன்னதுல ஒரு பயம். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனா, இவங்க சொன்ன 1 ஏக்கருக்கு எங்க முதலீடு வெறும் 7 ஆயிரம் ரூபாய். மத்த இரண்டு ஏக்கருக்கும் 50 ஆயிரம் ரூபாய். விளைஞ்ச காயை பார்க்கும் போது தான் உண்மை புரிஞ்சுதுங்க.
ஒரு தாருக்கு 3 கிலோ அதிகமான எடைல இயற்கை விவசாய வாழை விளைஞ்சிருந்துச்சு. அறுக்க வர்றவங்களே பார்த்து அசந்துட்டாங்க. விவசாயியோட சந்தோஷமே விளைஞ்ச பொருளை பார்த்து பூரிக்கும் போது தான். அது பிரசவிக்கற ஒரு தாய் தன்னோட குழந்தை நல்லா பிறந்திருக்கற பார்த்து ஆனந்தமா இருக்கற மாதிரியான மனநிலைங்க. அந்த மாதிரி நான் உணர்ந்த தருணம். இன்னிக்கு அதுவே வாழ்க்கையாகிப் போச்சு” என கூறும் நளினி அக்காவின் பூரிப்பு நமக்கும் ஒட்டிக் கொள்கிறது.
இந்தியாவின் முதல் பத்து இடங்களுக்குள் கால் பதித்திருக்கும், வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தமிழக்தில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. விவசாயத்தின் எல்லா பொருட்களையும், விவசாயியின் வாழ்க்கையில் ஒரு நிலையான மேம்பட்ட வளர்ச்சியைக் கொண்டுவருவதும் தான் எங்கள் லட்சியம் என்று கூறும் வெங்கட்ராஜா, விவசாயிகளே, விவசாயிகளுக்காக, என்ற நிலையை நாடெங்கும் உருவாக்குவோம்,
விவசாயத்தின் அனைத்து நிலைகளிலும் தீர்மானிக்கும் இடத்தில் அவர்களே இருப்பார்கள் என்ற நிலையையும் கொண்டு வருவதற்கான சீரிய பணியைத் தொடர்வோம் என்ற அவரின் வார்த்தைகளில் இருக்கும் உறுதி வெள்ளையங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கம்பீரத்தை நமக்கு பறைசாற்றுகிறது.