பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!

சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்!  

Last Updated : Jun 15, 2018, 07:32 PM IST
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு! title=

தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி  பசுமை வழிச்சாலை நிச்சயம் வந்தே தீரும் என்று உறுதி தெரிவித்ததையடுத்து, சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. 

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும். 

இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது. 

இந்நிலையில், விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் மக்கள், மற்றும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், எங்கள் விவசாய நிலத்தை எடுக்ககூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஆட்சேபனை மனுக்களை கொடுத்தனர். மேலும் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Trending News