வெளிமாநிலங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் இறுதியாண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதியாண்டு ஆண்டு பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை, அமைப்பு ரீதியாக உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு அலட்சியமாக இருக்கிறது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தமிழக மாணவர்களால் டெல்லி மாண‌வர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்ற விஷம பிரசாரம் நடைபெறுகின்ற நேரத்தில், தமிழக மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திட வேண்டியது மிக முக்கியமானதாகும் என்றும், அதற்கான ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லிக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்கள் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டு தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
தமிழக மாணவர்களின் நலனைக் காக்க பல முறை இந்த அரசிடம் வலியுறுத்தினோமே. இனியாவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! pic.twitter.com/PyNkRSVQ27
— M.K.Stalin (@mkstalin) May 18, 2019
முன்னதாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷி ஜோசுவா என்ற மாணவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வந்தார். இதனிடையே நேற்று காலை கல்லூரி அறையில் உள்ள மின் விசிறியிலேய ரிஷி ஜோசுவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.