முதலமைச்சராக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள காங்கேயம், ஈரோடு கஸ்பா பேட்டை, பன்னீர் செல்வம் பூங்கா, சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் வேனில் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் மாநிலத்திற்கு தேவையான நிதியும், திட்டங்களும் கிடைக்கும் என்றார். எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சர், அந்த திட்டம் மத்திய அரசு கொண்டு வந்ததே தவிர, மாநில அரசின் திட்டமல்ல என்றார். மேலும், தாம் ஒரு விவசாயி என்பதை சுட்டிக் காட்டிய அவர், ஒரு விவசாயி முதலமைச்சராக இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகளை கொச்சைப்படுத்துவதை ஸ்டாலின் கை விட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
22 தொகுதி இடைத் தேர்தலில் குறுக்கு வழியை கையாண்டு வெற்றி காண ஸ்டாலின் நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சராக வேண்டுமென்ற மு.க.ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று முதலமைச்சர் கூறினார். சிறுபான்மையினருக்கு காவல் அரணாக அதிமுக என்றும் இருக்கும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார். பிரசித்தி பெற்ற காங்கேயம் காளைகளை பெருமை படுத்த பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று அவர் வாக்குறுதியளித்தார்.