வாகன ஓட்டிகளிடம் கெடுபிடிகூடாது: போலீசாருக்கு உத்தரவு!

Last Updated : Sep 28, 2017, 11:19 AM IST
வாகன ஓட்டிகளிடம் கெடுபிடிகூடாது: போலீசாருக்கு உத்தரவு! title=

தமிழகத்தில், விபத்து குறைப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில், வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அனுப்பியுள்ள அறிக்கை:-

அதிகாரிகளின் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்; அப்போது, கட்டாயம் சீருடையில் இருக்க வேண்டும். வாகன சோதனையின் போது, கையில், 'டார்ச் லைட், வாக்கி டாக்கி' வைத்திருக்க வேண்டும்.

வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது, இன்ஜினை நிறுத்தச் சொல்லி, சாவியை வாங்கி, போலீசார் பொறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் வெடி மருந்து மற்றும் ஆயுதங்கள் இருந்தால், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வாகன சோதனையின் போது, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை வைத்திருக்க வேண்டும். சந்தேக நபர்கள் பிடிபட்டால், அந்த பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

'ஹெல்மெட், சீட் பெல்ட்' அணியாதது, அதிவேகம், அதிக பாரம், டூ - வீலரில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை ஏற்றுதல், போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும், வாகனம் ஓட்டுவோர் மீது வழக்கு பதிந்து, அபராத தொகை வசூலிக்க வேண்டும். அவரது, அசல் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

வாகன ஓட்டிகளை தேவையின்றி, வாகன சோதனை என்ற பெயரில் எரிச்சலடைய செய்யக் கூடாது; அவர்களிடம் லஞ்சம் வாங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News