திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது, திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது, காவி அணிந்து நல்லது செய்தால் அவர்களும் எங்களுக்கு நண்பர்களே என அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார். மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ தளபதி, மேயர் இந்திராணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். விழா மேடையில் தளபதி பேசிய பின்னர், அமைச்சர் பி.டி.ஆர். பேசுவதாக இருந்த நிலையில், நேர நெருக்கடி காரணமாக தான் பேசுவதாக கூறி அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமியின் புதிய பிரச்சார வாகனத்துக்கு செல்லூர் ராஜூவின் பலே விளக்கம்
விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி செயல்பட்டார். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி எங்கள் பேருந்து என மக்கள் அழைக்க காரணமாக இருந்தவர், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்துத் தந்தவர், கோவில் கருவறைக்குள் நம்மவர்களை நுழைய அனுமதிக்கவில்லை என்பதால் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். ஆன்மீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக காண்பிக்க எதிர்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால் அது நடக்காது. திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்.
தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை. மதிய உணவு திட்டத்தை காமராஜர் துவங்கி, எம்.ஜி.ஆர், கலைஞர் வரை அனைவரும் பல்வேறு விதங்களில் முன்னேற்றி இருந்தாலும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இது பல்வேறு விதங்களில் குழந்தைகளுக்கு பயன்படுகின்றது. இப்படி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நடத்தும் ஆட்சி தான் கலைஞர் ஆட்சி. மதுரைக்கு எய்ம்ஸ் வருகிறதோ இல்லையோ என்ற நிலையில், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திறந்தவர் ஸ்டாலின்" என்றார்.
மேலும், திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது காவல் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்த சம்பவம் கூட்டத்திற்கு வந்தோர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி
மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அப்பொழுது பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்ட நிறைவில் அமைச்சர் எ.வ வேலு பேசுகையில் பல்வேறு பிரச்சனைகள் தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைத்தல், போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் அதனை அதிகாரிகளைக் கொண்டு சரி செய்து வருவதாகவும் தெரிவித்து கொண்டிருந்த நிலையில், பல்வேறு அதிகாரிகள் அமைச்சர் எ.வ வேலு உரை தாலாட்டு போன்று இருந்தது மாதிரி பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பொதுமக்களின் உயிரைக் காக்க நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை விபத்துக்கள் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் எப்படி போனால் நமக்கு என்ன ? நமக்கு தூக்கம் தான் முக்கியம் என அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தது கூட்டத்திற்கு வந்திருந்தார் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ