EPS Campaign in Erode East: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித்தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது நாளாக நேற்று (பிப். 17) ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்டார்.
ஈரோடு கனிராவுத்தர் குளம், பிராமண பெரிய அக்ரஹாரம், வண்டிப்பேட்டை பகுதியில் பழனிசாமி பேசினார். அப்போது அவர்,"ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஆட்சியின்போது, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், அரசு மருத்துவமனை தரம் உயர்வு, கனிராவுத்தர் குளம் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சி அமைந்து 21 மாதமாகியும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரத்திற்கு வரும்போது, ரூ.6 கோடியில் சீரமைக்கப்பட்ட கனிராவுத்தர் குளத்தை பார்க்க வேண்டும். எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இதுவே சாட்சி.
'திமுகவினர் கில்லாடிகள்'
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக தற்போது 25 அமைச்சர்கள் இங்கு முகாமிட்டுள்ளனர். இதற்கு முன்பு ஒரு அமைச்சர் கூட இங்கு வரவில்லை. ஒவ்வொரு அமைச்சரும், ஈரோட்டிற்கு ஒவ்வொரு திட்டத்தைக் கொண்டு வந்திருந்தால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு வந்திருக்கும். அதை விட்டு விட்டு, தற்போது வீதி, வீதியாக வந்து குறை கேட்கின்றனர். மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள். எனவே, யாரும் ஏமாந்து விட வேண்டாம்.
கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது, மக்களை ஏமாற்றும் வகையில், 520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. இதில், 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார். மின்கட்டண உயர்வு, குடிநீர், சொத்துவரி உயர்வுதான் திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.
விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, அதனை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்ப்பதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். ஆனால், தற்போது கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், கனவில்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் குறைந்த விலையில் விற்பனையான அம்மா சிமெண்ட் விற்பனையையும் நிறுத்தி விட்டனர். குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத்தொகை வழங்கவில்லை.
எதுவும் செய்யவில்லை
திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்து அதிமுக சட்டப்போராட்டம் நடத்தியது. நீதிமன்ற உத்தரவால் அதனை நடத்த வேண்டிய நிலை வந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவதாக சொன்னவர்கள், இதுவரை நீட் தேர்வினை ரத்து செய்யவில்லை. கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயில, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், 564 பேர் இன்று மருத்துவக் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசு செலுத்துகிறது.
நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவினை உயர்த்துவது குறித்து சட்டப்பேரவையில் நான் கேட்டபோது மின்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இலவச மின்சார அளவை உயர்த்துவதாக அறிவிக்கின்றனர்.
தேர்தல் வந்தால்தான் திமுகவினருக்கு மக்களைப் பற்றிய ஞாபகம் வரும். திமுக ஒரு குடும்ப கட்சி. குடும்ப, வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்க இந்த இடைத்தேர்தல் முடிவு பக்கபலமாக இருக்க வேண்டும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரிசையில் இன்பநிதி வந்தாலும் ஆதரவு கொடுப்போம் என ஒரு அமைச்சர் சொல்கிறார். கருணாநிதி குடும்பத்திற்கு சேவை செய்யவே இவர்கள் அமைச்சராகியுள்ளார்.
அதிமுகவிற்கு மதமோ, ஜாதியோ கிடையாது
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்துள்ளது. 33 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்ப்படவில்லை. அதிமுகவிற்கு மதமோ, ஜாதியோ கிடையவே கிடையாது. 100 சதவீதம் மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. இதையெல்லாம் மறைத்து, சிறுபான்மையினர் வாக்குகளை பெற முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார். அதையெல்லாம் மறந்து விட்டு இஸ்லாமிய மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ரமலான் காலத்தில் நோன்பு கஞ்சிக்காக 5518 டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. வக்பு வாரிய மானியம் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. உலாமாக்கள் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது. பள்ளிவாசல்களை புதுப்பிக்க ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஹஜ் பயணத்திற்கான மானிய நிதி ரூ. 10 கோடியாக உயர்த்தப்பட்டது. ஹஜ் பயணிகள் தங்கி செல்ல ரூ. 15 கோடியில் கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. நாகூர் தர்கா சந்தன கூடு விழாவிற்கு விலையில்லா சந்தனம் வழங்கினோம்.
கொள்கை வேறு... கூட்டணி வேறு...
நாகூர் தர்கா குளக்கரை ரூ. 4.25 கோடி ஒதுக்கி சீரமைக்கப்பட்டது. உமறு புலவர் பெயரில் அரசு விருது, காமராஜர் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் நிரந்தர இருக்கை ஏற்படுத்தப்பட்டது. காயிதே மில்லத்திற்கு அரசு விழா எடுக்கப்பட்டதோடு, மணிமண்டபம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. திப்புசுல்தான், ஹைதர் அலிக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவராக இஸ்லாமியர் நியமிக்கப்பட்டார். அதிமுகவின் அவைத்தலைவரான தமிழ் மகன் உசேனும் ஒரு இஸ்லாமியரே. இதோடு, அப்துல் கலாம் ஜனாதிபதியாக, ஜெயலலிதா ஆதரவு அளித்தார். திமுக எதிர்த்து வாக்களித்தது.
இதையெல்லாம் இஸ்லாமிய மக்கள் மறந்து விடக்கூடாது. திமுகவினர் வாக்கு கேட்டு வரும்போது, இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். அரசியல் சார்ந்து அவ்வப்போது கூட்டணி அமைக்கப்படும். 1999இல் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தபோது தப்பில்லை. அரசியல் சூழ்நிலைக்காக, வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைப்பார்கள். ஆனால், கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கொள்கைகளை எவராலும் அழிக்க முடியாது. எப்போதும் மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுக. தமிழகத்தில் பிறந்த எந்த மதத்தை சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டால், துன்பப்பட்டால் முதல் குரல் கொடுக்கிற கட்சியாக அதிமுக இருக்கும்" என்றார்.
மேலும் படிக்க | தேனி: கேண்டீனில் கூலாக ரெஸ்ட் எடுக்கும் சிறுத்தை..! சிசிடிவி காட்சிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ