"காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக திமுக கழக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...
"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டி தண்ணீரைத் தேக்கிப் பாசனப் பரப்பை மேலும் விரிவுபடுத்திப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் வரையப்பட்ட, கர்நாடக மாநிலத்தின் 5912 கோடி ரூபாய் மதிப்பிலான "விரிவான திட்ட அறிக்கை"க்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருப்பதற்கு - அந்த அனுமதி தமிழகத்தின் குடிநீர்த் தேவையையும் வேளாண் நடவடிக்கைகளையும் பெருமளவுக்குப் பாதிக்கும் என்பதால் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே, சீரழிந்துவரும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வறட்சியாக்கிடும் வகையிலும், மிச்சமிருக்கும் மாநிலத்தின் வேளாண்மையை அடியோடு அழித்திடும் வகையிலும், 66 டி.எம்.சி காவிரி நீரைத் தேக்கி வைக்கும் இந்த அணைத் திட்டம், தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் புதிய அணைகட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முற்றிலும் விரோதமானது.
"புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கக் கூடாது" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. "விரிவான திட்ட அறிக்கை" தயார் செய்ய 2015-16 நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கிய போதே திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக விவசாயிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும் மத்திய பா.ஜ.க அரசுக்கு நன்கு தெரியும். எனினும் அவற்றையெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு சிறிதேனும் மதித்துப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஆளுங்கட்சியான அதிமுகவுடன் இணைந்து, தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தின் பொதுநலன் கருதி ஒரே அணியில் நின்று, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேரும் 28.03.2015 அன்று டெல்லி சென்று "மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது" என்று பிரதமர் திரு நரேந்திரமோடியிடம் நேரிலேயே வலியுறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் மக்கள் பிரதிநிதிகளின் ஒருமித்த கோரிக்கையைத் துச்சமெனத் தூக்கியெறிந்து விட்டு, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு, புதிய அணைகட்ட அனுமதி அளித்திருப்பது தமிழகத்தின் அடிவயிற்றில் எட்டி உதைத்திடும் அடாவடித்தனமான செயலாகும். மத்திய பா.ஜ.க அரசின் இந்த தமிழக விரோதப் போக்கு, ஏழரைக் கோடி தமிழக மக்களையும் எரிமலையாகக் குமுற வைத்திருக்கிறது. ஆனால், அதிமுக அரசோ விருதுகள் வாங்குவதிலும், விழாக்கள் கொண்டாடுவதிலும் ஈடுபட்டு, தமிழக உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது.
காவிரி இறுதித் தீர்ப்பின்படி "பல் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை" அமைக்கத் துணை நின்றது அதிமுக அரசு. உச்சநீதிமன்ற கெடுபிடிக்குப் பிறகும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகும் அவற்றை அலட்சியப்படுத்தி உருவாக்கப்பட்ட "அதிகாரமில்லாத" காவிரி இறுதித் தீர்ப்பு வரைவுத் திட்டத்தை தங்களின் "வாழ்நாள் சாதனை" போல் நினைத்து மகிழ்ச்சி விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டது எடப்பாடி அரசு.
காவிரி உரிமைகளை, நெஞ்சில் எவ்வித ஈரமுமின்றி, கை கழுவ பா.ஜ.க.வுடன் திரைமறைவில் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார். மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன்பு தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும். அடிக்கடி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக அமைச்சர்களும், பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்து “கடிதம்” எழுதினால் மட்டும் கடமை முடிந்து விட்டதாக அர்த்தமா? சமீபத்தில் கூட டெல்லியில் பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் நேரில் வலியுறுத்தி இந்த அனுமதி கொடுப்பதை ஏன் தடுக்கத் தவறினார்? இப்படி பல சந்தேகங்கள் தமிழக விவசாயிகளிடத்தில் எழுகின்றன.
அதிமுக அரசின் அலட்சிய அகம்பாவ மனப்பான்மையால் கர்நாடகாவில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு மிகச்சாதாரணமாக அனுமதி கொடுத்திருக்கிறது. "தமிழகத்தின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்" என்ற திரு எடப்பாடி பழனிசாமியின் பேச்சு முடிவதற்குள், ஒட்டு மொத்த தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் முதுகில் ஓங்கி ஈவு இரக்கமின்றி குத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க.அரசு.
ஆகவே, தமிழகத்தின் நெருக்கடியை ஒரு கணம் நினைத்துப்பார்த்து, மேகதாதுவில் புதிய அணை கட்டும் "திட்ட வரைவு அறிக்கைக்கு" கொடுத்துள்ள அனுமதியை மத்திய பா.ஜ.க. அரசு, மறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இரு மாநில நல்லுறவு மற்றும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, இத்திட்டத்தைப் பிடிவாதமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை கர்நாடக மாநில அரசு கைவிட்டுவிட வேண்டும் என்றும்; தமிழக அரசின் சார்பில் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி மத்திய அரசின் அனுமதிக்கும், கர்நாடக மாநில அரசு புதிய அணை கட்டும் விவசாயிகள் நேயமற்ற திட்டத்திற்கும், தாமதிக்காமல் தடையாணை பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தவறினால், காவிரி நதிநீர் வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் ஒன்றை உருவாக்கியதற்கு, அதிமுக அரசு முழுப்பொறுப்பேற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கிறேன்!" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்!