அதிமுக அரசு மத்திய அரசிடம் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறது - மு.க ஸ்டாலின்

Last Updated : Sep 17, 2017, 11:03 AM IST
அதிமுக அரசு மத்திய அரசிடம் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறது - மு.க ஸ்டாலின்  title=

‪நேற்று மாலை வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.

அதைக்குறித்து அவர் தனது முகநூலில் கூறியதாவது:-

தி.மு.க. முப்பெரும் விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில், மாநில அளவில் தேர்வான கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பணமுடிப்பு மற்றும் பதக்கங்களை வழங்கினேன்.‬ 

அதேபோல திரு. என்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பெரியார் விருதும், திரு. பெ.சு.திருவேங்கடம் அவர்களுக்கு அண்ணா விருதும், திரு. அ.அம்பலவாணன் அவர்களுக்கு பாவேந்தர் விருதும் மற்றும் திருமதி சங்கரி நாராயணன் அவர்களுக்கு கலைஞர் விருதும் வழங்கி, அவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினேன்.‬

‪திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா என்று சொல்வதைவிட மாபெரும் மாநாடாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியிருக்கும் கழக துணைப் பொதுச்செயலாளார் ஐ.பெரியசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் உட்பட கழக முன்னோடிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன்.‬

‪“ஆட்சிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களுக்காக இந்த இயக்கம் பாடுபடும், பணியாற்றும்” என்ற உயர்ந்த நோக்கோடு 1949-ம் ஆண்டு கொட்டும் மழையில், ராபின்சன் பூங்காவில் உருவாக்கப்பட்டது தான் திராவிட முன்னேற்றக் கழகம். அதன்படி, ஓராண்டு-ஈராண்டு அல்ல 68 ஆண்டுகளாக, தொடர்ந்து மக்கள் பணியாற்றிக் கொண்டிக்கும் ஒரு பேரியக்கம் என்பதை பெருமையோடு எடுத்துச் சொன்னேன். அதேபோல தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பெயரைக்கொண்டு எடுக்கின்ற இவ்விழாவில் சமூகநீதியை காப்பாற்றுவதும், மாநில உரிமைகளை பாதுகாப்பதும் தான் நம்முடைய முதல் கடமையாக இருக்க வேண்டும் என்றேன். ‬

‪அரை நூற்றாண்டுகாலமாக இந்தியை நாம் தமிழ்நாட்டில் நுழையவிடவில்லை. ஆனால், இப்போது நவோதயா பள்ளி என்கிற பெயரில் இந்தி தமிழகத்தில் நுழைய முயற்சிக்கிறபோது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் கட்சி நடத்தும் அதிமுக மானத்தை கப்பலேற்றிவிட்டு இன்றைக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.‬

‪பேரறிஞர் அண்ணா அவர்கள் 'வீடு இருந்தால்தான், ஓடு மாற்ற முடியும்’ என்று அடிக்கடி குறிப்பிடுவார். ஆனால், தமிழகம் என்ற இந்த வீட்டை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டு, அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறது குதிரை பேர அதிமுக அரசு. இன்றைக்கு தமிழகத்தில் நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு நேற்றுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம் என்று சொன்னேன், நாடியிருக்கிறோம். அந்த நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும், தெளிவாக புரிந்திருக்கும். இன்னும் இரண்டொரு நாளில் நீதிமன்றத்தின் மூலம் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்பவே இருக்கிறது. ‬
‪ ‬
‪ஒருவேளை அந்த நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், எந்த எதிர்பார்ப்போடு மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய வகையில் மக்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் ஒன்று தமிழகத்தில் நடைபெறும் என்கிற உறுதியை அவர்களிடத்தில் தெரிவித்தேன்.

Trending News