தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு உடனடியாக நீர் நிலைகளை தூர்வார அதிக கவனம் செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும்.
மதுராந்தகம் ஏரி போன்ற மிக முக்கியமான ஏரிகள் அந்தந்த பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுபோல் அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி தடுப்பணைகளை சீர்படுத்தி மழைநீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.
மேலும் பல கோடி ரூபாய் மழைநீர் சேமிப்புக்காகவும், தடுப்பணைகள் அமைப்பதற்காகவும் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருக்கும் இந்த அரசு, மழைக்காலம் தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் உடனடியாக அரசு ஏரிகளை தூர்வாரி தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்கின்ற நிலையை வரும்காலங்களில் நிரூபிக்கவேண்டும்.
மதுராந்தகம் ஏரியை தூர் வாரி, அந்த பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.