மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவ.21) மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21 ஆம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் கூறுகையில், "வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் மண்டலமாக மாறவில்லை. அடுத்தடுத்த நாட்களில் இது தாழ்வு மண்டலமாக மாறும். இது புயலாக மாற வாய்ப்பில்லை.
அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், காரைக்கால், புதுச்சேரி, தஞ்சை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று அவர் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.
சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22 ஆம் தேதி வரை நீடிக்கும். 23 ஆம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்சராசரியாக, 850 மி.மீ., மழை பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது என தெரிவத்தார்.