தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க டெல்லியில் தமிழ் அகாடமி: மனீஷ் சிசோடியா

பல தமிழ் இலக்கியங்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவையாக உள்ளன. கம்பர் மற்றும் திருவள்ளுவரின் படைப்புகள் சர்வதேச அளவில் பாராட்டப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2021, 10:38 AM IST
  • தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லியில் தமிழ் அகாடமி.
  • டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தலைமையில் இது இயங்கும்.
  • தமிழ் மொழி இந்திய அரசாங்கத்தால் ஒரு பாரப்பரிய பண்டைய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க டெல்லியில் தமிழ் அகாடமி: மனீஷ் சிசோடியா title=

புதுடெல்லி: துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தலைமையிலான தில்லி அரசின் கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3, 2021) தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாடமியை அமைத்து அதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. டெல்லி அரசு, முன்னாள் எம்சிடி கவுன்சிலர் மற்றும் தற்போதைய டெல்லி தமிழ்ச் சங்க உறுப்பினரான என் ராஜாவை அகாடமியின் துணைத் தலைவராக நியமித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட அகாடமிக்கு விரைவில் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் கொண்ட அலுவலக இடம் ஒதுக்கப்படும்.

"டெல்லி (Delhi) என்பது கலாச்சார ரீதியாக வளமான நகரமாகும். டெல்லி, நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் ஒரு இடமாக உள்ளது. இந்த பன்முகத்தன்மையே டெல்லியின் துடிப்பான மற்றும் மாநகர கலாச்சாரத்தை உருவாக்குகிறது. தில்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஏராளமான மக்கள் உள்ளனர். தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லி மக்கள் தெரிந்துகொள்ள நாங்கள் ஒரு தளத்தை முன்வைக்க விரும்புகிறோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் திரு. என்.ராஜா போன்ற குறிப்பிடத்தக்க பலர் முன்வந்து இந்த அகாடமியை நிறுவ எங்களுடன் கைகோர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று துணை முதல்வர் மனீஷ் சிசோடியா (Manish Sisodia)கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய என் ராஜா, “துணை முதல்வர் சிசோடியாவின் கீழ் தில்லி அரசு தமிழ் மொழி அகாடமியை நிறுவியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அகாடமியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்திய கலாச்சார வரலாற்றிலும் டெல்லியின் வரலாற்றிலும் தமிழ் மொழியும் கலாச்சாரமும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த அகாடமி உருவானவுடன், டெல்லியில் மொழியைப் பாதுகாத்து ஊக்குபவிக்கும் புதிய பயணத்தை துவக்குவோம்.” என்று கூறினார்.

புதிய அகாடமியின் கீழ் விருதுகள், திருவிழாக்கள் மற்றும் மொழி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன

தமிழ் மொழி (Tamil Language) மற்றும் கலாச்சாரத்தில் உள்ள படைப்பாளிகளின் நல்ல படைப்புகளை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கான சன்மானங்களை அளிப்பதற்கும் புதிய அகாடமி பல்வேறு விருதுகளை அறிமுகப்படுத்தும் என்று தில்லி அரசின் கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறை முடிவு செய்துள்ளது. இந்த அகாடமி மூலம் அரசு மொழி படிப்புகளையும் வழங்கும். தில்லி அரசு தமிழக மக்களுக்காக கலாச்சார விழா கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யும்.

ALSO READ: DMK: நான் என்ன தவறு செய்தேன், ஸ்டாலின் ஏன் துரோகம் செய்தார்? அழகிரி குமுறல்

தமிழ் கலாச்சாரம்

தமிழ் மக்களின் கலாச்சாரம் (Tamil Culture) நடனம், இசை, இலக்கியம், நாட்டுப்புற கலைகள் போன்ற பல வடிவ வெளிப்பாடுகளில் வேரூன்றியுள்ளது. பழமையான நாகரிகங்களில் ஒன்றின் பிறப்பிடமாக இருப்பதால், தமிழ் அடையாளமும் அதன் கலாச்சாரமும் தமிழன்னை (தமிழ்த்தாய்) என்று அன்பாகக் குறிப்பிடப்படும் தமிழ் மொழியை மையமாகக் கொண்டுள்ளன.

தமிழ் மொழி இந்திய அரசாங்கத்தால் ஒரு பாரப்பரிய பண்டைய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல தமிழ் இலக்கியங்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவையாக உள்ளன. கம்பர் மற்றும் திருவள்ளுவரின் படைப்புகள் சர்வதேச அளவில் பாராட்டப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து வெளிவந்த பல கலை படைபுகள் உலக அளவில் பேசப்படுகின்றன. இவற்றில் சோழ வெண்கல சிற்பங்கள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டியவையாகும். உலக கலைக்கு இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்புகளில் இவற்றிற்கும் பங்குண்டு.

பெரும்பாலான தமிழ் நடன வடிவங்கள் பண்டைய கோவில் நடனங்களில் தோன்றியவை. அத்தகைய நடன வடிவங்களில் ஒன்று பரதநாட்டியம் ஆகும். ஒயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் மற்றும் கூத்து ஆகியவை தமிழ் கலாச்சாரத்தின் வேறு சில முக்கிய நடன வகைகளாகும்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் என் ராஜா நீண்டகால ஈடுபாட்டைக் கொண்டுள்ளார். டெல்லி தமிழ் சங்கத்தில் தற்போதைய உறுப்பினராக உள்ள அவர் அதன் மூலம் தமிழ் மொழியை தீவிரமாக ஊக்குவித்து வருகிறார்.

ALSO READ: இன்று துவங்குகிறது கோயம்புத்தூர் விழா: COVID முன்னணி வீரர்களுக்கு சிறப்பு மரியாதை

டெல்லி தமிழ்ச் சங்கம், தமிழ்நாட்டின் (Tamil Nadu) கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பல இசை, இலக்கிய மற்றும் நடன நிகழ்வுகளுக்கு அவ்வப்போது ஏற்பாடு செய்கிறது. மேலும் பல வளர்ந்து வரும் பரதநாட்டிய நடனக் கலைஞர்களுக்கு தன் மேடையை வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறது. தமிழகத்திலிருந்து வரும் பல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து டெல்லி வாழ் தமிழ் மக்கள் தங்கள் மொழியோடும் கலையோடும் இணைப்பில் இருக்க பாலமாய் அமைகிறது.

திரு. ராஜா மலய் மந்திர் கோயில் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் 2007 முதல் 2018 வரை இரண்டு முறை வார்டு எண் 64 இன் எம்.சி.டி கவுன்சிலர் பதவியை வகித்துள்ளார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News