மத சடங்குகளில் தலையிட நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் -உயர் நீதிமன்றம்!

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2018, 07:41 PM IST
மத சடங்குகளில் தலையிட நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் -உயர் நீதிமன்றம்! title=

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19-ஆம் நாள் மரணமடைந்தார். இதனையட்டுத்து 12-வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஸ்ரீ யமுனாச்சாரியார் ஸ்வீகரம் மற்றும் பட்டாபிஷேகம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அவரது நியமனத்தை எதிர்த்து சென்னையை ஆசிரம சீடர் வெங்கட வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் '2015-ஆம் ஆண்டு 11-வது மடாதிபதி எழுதி வைத்த உயிலின்படி தனக்குப் பிறகு மடாதிபதியாக நியமிக்க 3 பேரை பரிந்துரைத்திருந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். எனவே மீதமுள்ள இருவரின் ஒருவரை பீடாதிபதியாக நியமிப்பது தான் முறை. ஆனால் இரண்டுபேரையு விட்டு மூன்றாவது நபர் ஒருவரை அவசர அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக புகார்' கூறப்பட்டுள்ளது.

மேலும், உயிலில் கூறப்பட்டபடி நியமனம் நடபெறவில்லை எனவும், மரபு மற்றும் நடைமுறைகள் பின்பற்றப் படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடர முடியாது எனவும் சிவில் வழக்கு மட்டுமே தொடர முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும், மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். 

புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்!

Trending News