சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் அடிப்படையில் தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பயண அனுபவங்களையும், பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த சில நெகிழ்ச்சியான தருணங்களைப் பார்க்கலாம்.
என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்றுதான் அந்த கடிதத்தை ஆரம்பித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உழவர் ஓதை, மதகு ஓதை, உடைநீர் ஓதை தண்பதங்கொள் சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” என்ற சிலப்பதிகார வரிகளுக்குச் சிறப்பான உரை எழுதிடும் வண்ணம், கரைபுரளும் காவிரி டெல்டா மாவட்டங்களில், ஓய்வில்லாத இரண்டு நாள் ஆய்வு சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தபின், தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
அரசின் அறிவிப்புகள் வெற்றுக் காகிதங்களாகவோ வெறும் காற்றில் கலந்து, கரைந்து போவதாகவோ இருந்துவிடாமல், அவை முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா, ஒவ்வொரு அறிவிப்புக்குமான செயல்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக அந்த ஆய்வு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 29c-ம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்.!
தாத்தாவின் கையெழுத்தைப் பார்த்த தருணத்தை இப்படியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்குகிறார்,
‘பயண வழியில் முதலில் தஞ்சாவூரில் வரவேற்பு அளித்தனர். அப்போது, வா.வீரசேகரன் என்ற கழகத் தோழர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அது என்னவென்று பார்த்தபோதுதான், அது வெறும் காகிதமல்ல, அரிய ஆவணம் என்பது தெரிந்தது.
அது என்னவென்றால், திருவாரூர் கமலாம்பிகா நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் நமது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தையும் எனது தாத்தாவுமான முத்துவேலர் அவர்கள் தனக்கிருந்த பங்குகளை, தன் வயதுமூப்பின் காரணமாக, நம் தலைவருக்கு மாற்றித் தரக்கோரிய ஆவணம் அது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக 1946-இல், கூட்டுறவு வங்கியின் ஆவணத்தில் தாத்தா முத்துவேலரின் கையெழுத்தையும் தலைவர் அவர்களின் ஆங்கில எழுத்துகளில் அமைந்த கையெழுத்தையும் பார்த்தபோது பரவசமாக இருந்தது.!’
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பீமனோடை வடிகாலைத் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்ட போது, அங்கிருந்த மக்கள், ‘இவ்வளவு கடுமையா அலையுறீங்களே.. உடம்பைப் பார்த்துக்கோங்க” என்று கூறியதை பெருமையாக பதிவு செய்திருக்கிறார்.
பேரளமும், மு.க.ஸ்டாலினும்.!
பேரளம் பகுதியில் ஆய்வு செய்த போத, பலவிதமான பால்ய கால நினைவுகளுக்குள் சென்றிருக்கிறார். அவரது சொற்களிலேயே பார்க்கலாம்.
‘திருவாரூர் மாவட்டத்திற்குப் பயணம். பேரளம் ரயில்வே கிராஸிங்கைக் கடக்கும்போது என் சிறு வயது நினைவுகள் வட்டமிட்டன. பள்ளிக்கூட நாட்களில் அம்மாவின் ஊருக்கு வரும்போது, பூந்தோட்டம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித்தான் மாட்டு வண்டியில் செல்வோம். தாய் பிறந்த மண்ணுக்கு வரும்போது என் தாயார் தயாளு அம்மாள் மனதில் எழும் மகிழ்ச்சியும் உறவினர்கள் காட்டும் அன்பும் நெஞ்சை விட்டு அகலாதவை.!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே பேரளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அது இதுதான்,
‘என்னுடைய மாமா தெட்சிணாமூர்த்தி அவர்கள் 99 வயதிலும் ஆர்வத்துடன் வந்து வரவேற்றார். நான் திடுக்கிட்டு, “நீங்க ஏன் இந்த வயதில் சிரமப்படுறீங்க? நானே வீட்டுக்கு வந்திருப்பேனே!” என்றேன். கழகப்பற்று மிகக் கொண்டவரான மாமா, “உன்னைப் பார்த்து வாழ்த்து சொல்லணும்னுதான் வந்தேன். ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணிக்கிட்டிருக்க நீ” என்றபோது நெகிழ்ந்து விட்டேன்.’
மேலும் படிக்க | 'அண்ணா' மீது ஆணையாக நிச்சயம் நிறைவேற்றுவேன் -முதல்வர் ஸ்டாலின் சபதம்
கருணாநிதி பிறந்த ஊருக்கு ஆய்வு செல்லும்போது, அந்த அனுபவத்தை விளக்கும் பத்தியை கடிதத்தில் இப்படித்தான் தொடங்குகிறார், ‘திருவாரூரை நெருங்க நெருங்க வரவேற்பும் அதிகமானது. தமிழ் காக்கத் தளராது போராடிய நம் தலைவர் முதன்முதலில் தமிழ்க்கொடி ஏந்திப் போராடிய மண் அல்லவா!’ என்று.
நான் டெல்டாக்காரன்.!
சொந்த ஊர்ப்பற்றை தேர்ந்த சொற்களால் பதிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறுதியாக அந்தக் கடிதத்தை நெகிழ்வோடு முடிக்கிறார்.
அந்தக் கடிதத்தின் கடைசிப் பத்தி இதோ,
‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக ‘யாதும் ஊரே’ என்ற பொறுப்புணர்வுடன் அனைத்து ஊர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டாலும், காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத் தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது. அதிலும் திருவாரூர் என்கிறபோது தலைவர் கலைஞரின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய்சிலிர்ப்பது வழக்கமாக இருக்கிறது.
அது, நம் ஆருயிர்த் தலைவர் போல என்றும் ஓயாது உழைக்க வேண்டும் என்ற தளராத ஊக்கத்தைத் தருகிறது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாடிய புலவரே கணியன் பூங்குன்றன் என்று தன் பெயருடன், தனது ஊரான பூங்குன்றத்தைச் சேர்த்துக் கொண்டார் என்று சொல்வார் முத்தமிழறிஞர் கலைஞர். காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாயும் இடங்களுக்குச் செல்லும்போது அதுபோன்ற உணர்வுதான் எனக்கும்.
என்ன இருந்தாலும் அடிப்படையில் நான் டெல்டாகாரனாயிற்றே!’
மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR