சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று 4 மணிக்கு இடிப்பு

Last Updated : Jun 1, 2017, 03:30 PM IST
சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று 4 மணிக்கு இடிப்பு title=

சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

7 மாடி கொண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதம் அடைந்தன.

தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 2-வது நாளாக தீ எரிகிறது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்ததால் இன்று கட்டிடத்தின் 4, 5, 6, 7-வது மாடிகள் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதி முழுவதும் பயங்கர புகை மூட்டம் கிளம்பியது. 

இதனால் கடையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.தீ விபத்தினால் வலுவிழந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிப்பது குறித்து ஆலோசிக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஐந்து துறைகளின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

தீ விபத்து காரணமாக கட்டிடம் வலு இழந்துள்ளதால், கட்டிடத்தை முற்றிலும் இடித்துத் தள்ளுவது என அந்த குழு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

இதனிடையே, திநகர் சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணிகள் இன்று மாலை தொடங்கும், அதற்கான செலவு நிறுவனத்திடம் பெறப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த பணியில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது.

கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் 200 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

Trending News