சென்னையில் மின்தடை
சென்னையில் நேற்றிரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. ஒருசில பகுதிகள் என்றில்லாமல் ஒட்டுமொத்த சென்னையே மின்சார தடையால் சிக்கிக் கொண்டது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகள், வயதானவர்கள் இருப்பதால் அவர்களால் தூங்க முடியவில்லை என்றும் ஆக்ரோஷமாக பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக மின்சாரம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியதால், சென்னை மாநகரம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. சில இடங்களில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த நிலையில், மின்சார தடைக்கான காரணம் குறித்தும் உடனடியாக சமூகவலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை மின்தடைக்கு காரணம் என்ன?
சென்னைக்கு மின்சாரம் வழங்கும் மணலி துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தே சென்னையில் திடீரென மின்தடை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். சென்னை புறநகர் பகுதியான மணலியில் அமைந்திருக்கும் துணை மின்நிலையத்தில் இருந்துதான் சென்னைக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்கு நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாகவே சென்னைக்கு மின்சார விநியோகம் முழுவதும் தடைபட்டு, மாநகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம், ராயபுரம் என பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை.
மின்விநியோகம் எப்போது சீராகும்
இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாக மின்விநியோகம் செய்வதற்கான பணிகளில் இறங்கினர். ஒரு தரப்பினர் மணலியில் தீ விபத்தில் சிக்கிய துணை மின் நிலையத்தில், உடனடியாக செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மற்றவர்கள் வேறு எந்தெந்த வழிகளில் எல்லாம் உடனடியாக மின்சாரத்தை கொடுக்க முடியுமோ அந்த லைன்களை சீரமைப்பதில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளிக்கும்போது, "மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. படிப்படியாக மின்சாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. மத்திய சென்னை பகுதியில் மின் விநியோகம் கொடுக்க துவங்கியுள்ளோம். வடசென்னை பகுதியில் விரைவில் மின் விநியோகம் சீராகும்" என்று தெரிவித்துள்ளார். எனினும் சென்னை முழுவதும் மின்சாரம் சீராக வழங்க 3 முதல் 4 மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தீ விபத்து குறித்து எவ்வாறு தீப்பற்றியது என மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கிசுகிசு : செம அப்செட்டில் தூங்காநகரத்து மூன்றெழுத்து இன்ஷியல் மாண்புமிகு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ