வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...!
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யதது. இதன் தொடர்ச்சியாக வேளச்சேரி, கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், ராயபேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...!
மத்திய கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஆந்திரா முதல் கோவா வரை வளிமண்டலத்தில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவருவதன் காரணமாக, கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்பதால், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடற்பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.