MR Vijayabhaskar Case Latest Updates: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலமாக போலி ஆவணங்களை வைத்து மோசடியாக எழுதி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இன்றும் விசாரணை
இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தனிப்படைகள் அமைத்து கடந்த 15 நாள்களாக தீவிரமாக தேடி வருகின்றது. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது தந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதாகவும், அதனால் நான்கு நாட்கள் மட்டும் முன்ஜாமின் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | விஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமே
திடீரென சீனுக்குள் வந்த சிபிசிஐடி
இந்த இடைக்கால முன்ஜாமின் மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தொடர்ந்து, சாதாரண முன்ஜாமின் மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிபதி தெரிவித்து இருந்தார். இன்று சாதாரண முன்ஜாமின் மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 8 மணி முதல் கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த யுவராஜ் என்பவரது வீட்டில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான 4 போலீசார் கரூர் மாவட்ட காவல்துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு தகவல்கள்
இதேபோல் வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரகு மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மேற்கண்ட நான்கு இடங்களிலும் சொத்து மோசடி வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கரூரை சுற்றும் வழக்குகள்
எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் அவர் இடம்பெற்றது அதுவே முதல்முறை. அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதே கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி 12 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். இருப்பினும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார், அமைச்சரவையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
முன்ஜாமினா...? கைதா...?
செந்தில் பாலாஜியும் முன்னாள் அதிமுக அமைச்சர் என்ற நிலையில், தற்போது அதே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரும் நில மோசடி வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இன்று விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்கப்படுமா அல்லது ரத்து செய்யப்பட்டால் அவர் கைதாவாரா என்பது விரைவில் தெரியவரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ