கருகும் நெற்பயிர்கள்; உழவர்கள் கவலை; அமைதி காக்கும் அரசு -ராமதாஸ் கண்டனம்

சம்பா பயிர்கள் கருகி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் பரவாயில்லை, மணல் கொள்ளை தடையின்றி நடக்க வேண்டும் என்று நினைப்பது மக்கள் நல அரசாக இருக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2018, 03:25 PM IST
கருகும் நெற்பயிர்கள்; உழவர்கள் கவலை; அமைதி காக்கும் அரசு -ராமதாஸ் கண்டனம் title=

சம்பா பயிர்கள் கருகி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் பரவாயில்லை, மணல் கொள்ளை தடையின்றி நடக்க வேண்டும் என்று நினைப்பது மக்கள் நல அரசாக இருக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

காவிரியிலும், கொள்ளிடத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் தீராத நிலை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கருகும் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி உழவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு அமைதி காத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் பெய்த மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்ததால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணையும் நிரம்பி வழிந்ததால், அதை நம்பி காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நேரடி விதைப்பு முறையில் பயிரிடப்பட்டுள்ளன. முளைவிட்டு ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், பாசனக் கால்வாய்களில் போதிய அளவில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பயிர்கள் கருகிவிட்டன. இதனால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மேட்டூர் அணை கடந்த இரு மாதங்களில் நான்கு முறை நிரம்பியுள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா பயிருக்கு தண்ணீர் கிடைக்காததற்கு மேலணையை சீரமைப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் தான் காரணம் ஆகும். காவிரி ஆற்றில் அளவுக்கு அதிகமாக நடந்த மணல் கொள்ளையால் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த மேலணையின் 9 மதகுகள் அடித்துச் செல்லப் பட்டன. கதவணையின் பாலமும் உடைந்ததால் அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலணையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் 4 நாட்களில் முடிவடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில், 16 நாட்கள் ஆகியும் அந்த பணிகள் முடிவடையவில்லை. எப்போது முடிவடையும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. மேலணையை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 6,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களிலும் தண்ணீர் பாயவில்லை. பயிர்கள் கருக இதுவே காரணமாகும்.

காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட போதே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இப்போது 6000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அது ஆற்றை நனைப்பதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதேநிலை நீடித்தால் சம்பா பயிர்கள் சூறை நோயால் தாக்கப்படும் ஆபத்தும், ஒட்டுமொத்தமாக கருகும் ஆபத்தும் உள்ளன. இதைத் தடுக்க ஒரே வழி காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு 20,000 கன அடிக்கும் கூடுதலாக அதிகரிப்பது தான். ஆனால், மேலணை சீரமைப்பு பணிகள் முடியாமல் இதை செய்வது சாத்தியமல்ல.

மேலணை சீரமைப்பு பணிகளை அதிகபட்சமாக ஒரு வாரத்தில் முடித்திருக்க முடியும். ஆனால், இரு வாரங்களுக்கு மேலாகியும் அந்த பணிகளை முடிக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இது ஒருபுறமிருக்க காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டதை பயன்படுத்தி நாமக்கல், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் மணல் குவாரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. மணல் குவாரிகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் மேலணையை சீரமைப்பதில் தமிழக அரசு காட்டாதது பல்வேறு யூகங்களை ஏற்படுத்துகிறது. மணல் கொள்ளையை நடத்த வேண்டும் என்பதற்காகவே மேலணை சீரமைப்புப் பணிகளை அரசு தாமதப்படுத்திறதோ என்ற ஐயம் எழுகிறது.

சம்பா பயிர்கள் கருகி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் பரவாயில்லை, மணல் கொள்ளை தடையின்றி நடக்க வேண்டும் என்று நினைப்பது மக்கள் நல அரசாக இருக்க முடியாது. எனவே, மேலணையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகளை அடுத்த ஓரிரு நாட்களில் முடித்து, காவிரியில் அதிக அளவில் தண்ணீரை திறக்க வேண்டும்; அதன் மூலம் கருகும் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News