புது டெல்லி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும் என்றும், அது நாளை இரவுக்குள் 2.40 லட்சம் கன அடியையாக மாறும் என்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதும் பாதுகாப்புக் காரணத்துக்காக காவிரியில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்த அதிகரிக்கப்பட்டு வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. தமிழகத்திற்கு வரும் அதிகப்படியான காவிரி நீரால் ஒகேனக்கல் அருவிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணைக்கு 12 முதல் 15 டி.எம்.சி. வரை நீர்வரத்து இருக்கும் என்பதால் அணையின் அருகிலுள்ள தாழ்வான பகுதிகளான மூலகாடு, பலவாடி, கோட்டையூர், காவேபுரம், கோவிந்தபாடி, கருங்கலூர், சேட்டியூர், சின்ன மேட்டூர் மற்றும் கூனந்தியூர் போன்ற ஊர்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.