Lok Sabha Election 2024: மக்களவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தேர்தல் வேட்பாளர் விண்ணப்பம், தேர்தல் வாக்குப்பதிவு, தேர்தல் வாக்கு எண்ணிக்கை சார்ந்த தேதிகள், அட்டவணைகளை தேர்தல் ஆணையம் கூடிய விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?
குறிப்பாக, மார்ச் 14 அல்லது 15ஆம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை போலவே இந்த முறையும், மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறக்கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு மாநிலம் வாரியாக அம்சங்களை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஆய்வுகள் முடிந்த பின்னர் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க | பிடிஆர் - பிரதமர் ரகசிய சந்திப்பு..! வெளியான புகைப்படம் - பின்னணி என்ன?
தீவிரம் காட்டும் பாஜக, காங்கிரஸ்...
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அனைத்து கட்சிகளும் தீவிரமாக தங்களது தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன. பாஜக தரப்பில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னரே பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் உள்ளார் என தெரிகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான INDIA தற்போது பல்வேறு மாநிலங்களின் தங்களின் இறுதிக்கட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் உள்ளன. தமிழ்நாட்டில் திமுக இதுவரை தனது கூட்டணி கட்சிகளான IUML, கொமேதேக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளையும், மற்ற இரு கட்சிக்கும் தலா 1 தொகுதியையும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நட்சத்திர வேட்பாளர்கள்...
அதேபோல், திமுகவின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. திமுக அதன் உறுப்பினர்களிடம் இருந்து தேர்தல் விருப்ப மனுக்களை பெற்று வரும் நிலையில் தேர்தல் பங்கீடு இறுதியாகி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என தெரிகிறது. திமுக vs அதிமுக vs பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது என்பதால் பெருமளவில் நட்சத்திர வேட்பாளர்களை நிறுத்த மூன்று கட்சிகளும் முயற்சி எடுத்து வருகின்றன.
அந்த வகையில், திமுகவில் நடிகர் வடிவேலுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்யும்போது, பேச்சுவார்த்தையில் வடிவேலுவின் பெயரும் அடிப்பட்டதாகவும், தொடர்ந்து வடிவேலுவுடன் இதுகுறித்து கேட்டதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சென்னையில் உள்ள மூன்றில் ஏதேனும் உள்ள தொகுதியிலோ அல்லது தென் மாவட்டங்களான மதுரை, தேனி தொகுதியிலோ அவரை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அரசியலிலும் ரீ-என்ட்ரி?
2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்காக மேடை மேடையாக பிரச்சாரம் செய்த வடிவேலு, அதிமுகவையும் குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்து விஜயகாந்தையும் கடுமையாக விமர்சித்தார். இதனால், 2011இல் அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் உச்சத்தில் இருந்த அவரின் திரைவாழ்வு கடுமையாக சரிந்தது. அதன்பின், தற்போதுதான் வடிவேலு மீண்டும் பொது நீரோட்டத்திற்கு திரும்பி உள்ளார்.
கடந்தாண்டு உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த வடிவேலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில், சென்னை பெரம்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் வடிவேலு பேசியதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி எல்லாம் நாடகம் - சு.வெங்கடேசன் எம்பி விளாசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ