புதுடெல்லி: நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவேண்டும் என்றும், அந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அனைத்து மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பிளாஸ்டிக் தடை குறித்து விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து பேசியிருந்தார். மேலும் பிளாஸ்டிக் இல்லா பாரதத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம் என பிரதமர் அடிக்கடி கூறிவருகிறார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு முன்னர் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு தன்னால் முடிந்தவரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ரயில்வே போன்ற பகுதிகளில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லமான 7 லோக் கல்யாண் மார்கில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை உட்பட பல முக்கியமான முடிவுகளை மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்க உள்ளது.
அதேபோல தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.