நடிகர் அதர்வா நடித்த "100" படத்தை ஜூன் 17வரை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!!
டார்லிங் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். இவர் இயக்கிய முதல் படத்திற்கே பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் தன்னிடைய அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சாம் ஆண்டன்.
இப்போது சாம் ஆண்டன் 100 என்ற திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். அதர்வா இந்த படத்தில் வெறப்பான போலீஸாக நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ஆரோ சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நடிகர் அதர்வா நடித்த "100" படத்தை ஜூன் 17வரை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக 70 எம்.எம்.எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர் பாலாஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், பலூன் திரைப்படம் வெளியிடும் உரிமைக்காக, 6 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 5 கோடியே 18 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மீதி தொகையை, பலூன் படம் வெளியாகும் முன்பு வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அத்தொகையை வழங்காமல், நூறு என்ற படத்தை அந்நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், தனக்கு வழங்கவேண்டிய தொகையை திரும்ப செலுத்தும் வரை அப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக அந்நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.