தமிழகத்தில் பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டன.
மொத்தம் 14121 பேர் விண்ணப்பங்கள் வரப்பெற்றிருந்தன. அதன் அடிப்படையில், தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது.
இன்றும், நாளையும் தொழில் கல்வி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 19-ம் தேதி நடக்கிறது. மேலும், விளையாட்டு பிரிவு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு 21-ம் தேதி அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து, 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்டு 16-ம் தேதி துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 17-ம் தேதி துணை கலந்தாய்வும், 19-ம் தேதி ஆதி திராவிடர், அருந்ததியர் ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெறும் தொழில் பிரிவு கலந்தாய்வில் உள்ள 6,224 இடங்களுக்கு தகுதியான 2084 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
காலை 10.30 மணிக்கு தொடங்கும் அந்த கலந்தாய்வு நாளை மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பிரிவில் முதலாவதாக மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்படுகின்றனர்.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்குகிறது. அன்று மட்டும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து, தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
சுயநிதி தொழிற்கல்வி கட்டண நிர்ணயக்குழு 2017-18-ம் கல்வி ஆண்டில் இளங்கலை என்ஜினீயரிங் பாடப்பிரிவுக்கான கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்த கட்டணத்தின்படி, தேசிய தர அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவிற்கு ரூ.55 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவிற்கு ரூ.50 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு தேசிய தர அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கு ரூ.87 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவிற்கு ரூ.85 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.