இரட்டை மின்கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை என தேர்தல் கமிஷனுக்கு மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பு மனு தாக்கல், 16-ம் தேதி துவங்குகிறது. ஆர்கேநகர் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு அடைந்தது. இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனுவை திரும்ப பெற விரும்புவோர் 27-ம் தேதி மாலை 3:00 மணிக்குள் பெற வேண்டும். அன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 12-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
இதில் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் மதுசூதனன் இரட்டை மின்கம்பம் சின்னத்திலும், தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இரட்டை மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை சின்னம் போல் சித்தரித்து தவறாக பயன்படுத்துவதாக மதுசூதனன் மீது தினகரன் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக ஏப்ரல் 3-ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி விளக்கம் அளித்து மதுசூதனன் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதில் இரட்டை மின்கம்பம் சின்னத்தை நான் தவறாக பயன்படுத்தவில்லை. தினகரன் தான் தனது பிரசாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியின் பெயரையும் தவறாக பயன்படுத்தி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.