வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணியளவில் உடல்நல குறைவால் காலமாணார்!
திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த உழவரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான நெல் ஜெயராமன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார்.
பயன்பாட்டில் இல்லாத நெல் வகைகளை மீட்டெடுத்து அவற்றை அதிக அளவில் சாகுபடி செய்ய வைப்பதற்காக இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியவர் நெல் ஜெயராமன். யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட 169 வகையான பாரம்பரிய நெல்வகைகளை இதுவரை அவர் மீட்டெடுத்துள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழாவை நடத்தி மீட்டெடுக்கப்பட்ட நெல் ரகங்களில் தலா ஒரு கிலோவை உழவர்களுக்கு வழங்கி, அடுத்த ஆண்டு அதே நெல் வகையில் 4 கிலோவை வாங்கி நெல் ரகத்தை பரப்பியவர்.
மேலும் பல நெல் ரகங்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அரசியல் தலைவர்கள் முதல் பலரும் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்