ஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை!!

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை!!

Last Updated : Apr 28, 2020, 05:54 PM IST
ஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை!! title=

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை!!

சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என்று கூறி சமூக வலைத்தளங்களில் அவரை பலரும் கடுமையாக சாடி வருகின்றனர். நடிகை ஜோதிகா அந்த விழா மேடையில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் அழகானது. அதை மிக அழகாக அரண்மனைகளை போல் பாதுகாத்து வருகிறார்கள். நான் அதை பார்த்துள்ளேன் என்று கூறினார். என்னுடைய அடுத்த நாள் படப்பிடிப்பு தஞ்சையில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்றது.

அந்த மருத்துவமனையில் நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. அந்தளவிற்கு பராமரிக்கப்படாமல் அங்குள்ளவர்கள் அவதிப்படுவதை என் கண்களால் பார்க்க முடிந்தது. கோயிலுக்காக அனைவரும் பணம் கொடுக்கிறீர்கள் அதேபோன்று மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பராமரிப்பதற்கு தேவையான தொகையையும் அளியுங்கள். கோயில்களை விட மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் தான் மிகவும் முக்கியம் என அவர் கூறியிருந்தார். நடிகை ஜோதிகா கூறிய இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை ஜோதிகா , தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா தன்னுடைய மனைவியின் கருத்திற்கு ஆதரவாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

'கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப்பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச்செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். “கொரோனா தொற்று” காரணமாக இயல்பு வாழ்க்கைப்பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள், ஆன்மீகப்பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக்கையாண்டன. 

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்" என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Trending News