தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது. அதை கட்டுப்படுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் மே 21-22 ஆம் தேதி நடந்தது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” போராட்டத்தில் சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள் புகுந்து விட்டனர். அவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் மேற்கொண்ட உண்மையான போராட்டத்தின் பெயரை கெடுக்கும் வகையில், சமூக விரோதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சமூக விரோதிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தார். தற்போதைய அரசும், அதே போல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் ( Anti- Sterlite protest) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழக அரசு (TN Government) நியமித்தது.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், உட்பட பலரிடம் அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருவது தொடர்பாக ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பியது.
தான் விசாரணைக்காக நேரில் ஆஜரானால், ரசிகர்கள் கூடி, பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி ரஜினிகாந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி விசாரணை ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
அதன் பிறகு கொரோனா தொற்று (Corona virus) பரவல் காரணமாக விசாரணை நடவடிக்கைகள் மேலும் தாமதமாகின.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பான விசாரணைக்கு ஜனவரி 19 ஆம் தேதி ஆஜராக, நடிகர் ரஜினிகாந்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ALSO READ | Tamil Nadu Election: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR