தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Last Updated : Oct 16, 2018, 08:47 AM IST
தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!! title=

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் கல்வி மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் அந்த  திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதில், மாணவர்களுக்கான ‘ஸ்மார்ட் கார்டில்’ உள்ள ‘க்யூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ வாயிலாக மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொது தொகுப்பில் இருந்து இணையதளத்தின் வாயிலாக பெற முடியும். மேலும் மாணவர்கள் வருகையை கண்காணிக்க முடியும். மாணவர்கள் இடைநிற்றல் துல்லியமாக கண்டறியப்படும். 

மாணவர்கள் ‘ஸ்மார்ட் கார்டை’ அணியும்போது தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக தங்களை உணர்கிற வாய்ப்பு ஏற்படும். மேலும் பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு துறையின் கீழ் உள்ள 37 ஆயிரத்து 358 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்களுக்கும், 8 ஆயிரத்து 386 அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவர்களுக்கும் என மொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தயாரித்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கவும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 அனுமதித்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அதனை கவனமுடன் பரிசீலித்து ஏற்க அரசு முடிவு செய்து ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Trending News