முன்னாள் ISRO விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு....!
வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்ரோ மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது, 1994 ஆம் ஆண்டில், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவுபார்த்து, மாலத்தீவு உளவுப்பிரிவை சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுசியா ஹசன் எனும் 2 பேருக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தாம் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக பின்னர் குற்றம்சாட்டினார்.
தம்மிடம் விசாரணை நடத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், இஸ்ரோ உயரதிகாரிகளை சிக்க வைக்கும் வகையில் வாக்குமூலம் அளிக்குமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தபோது நிலைகுலைந்து போகும் அளவுக்கு சித்திரவதை செய்ததாகவும் நம்பி நாராயணன் குற்றம்சாட்டியிருந்தார். கேரள போலீசாரிடம் இருந்து வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு, நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு, வழக்கு 1996 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.
உச்சநீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து 1998 ஆம் ஆண்டில் விடுவித்தது. இதன் பிறகு, கேரள அரசு நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டன.
ISRO scientist alleged spying case: Supreme Court says, "Arrest of ISRO scientist Nambi Narayan is needless and unnecessary,"; Court grants him a compensation of Rs 50 lakh
— ANI (@ANI) September 14, 2018
இந்நிலையில், தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.