தமிழகத்தில் 8.66 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.
இந்த தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மேலும் மறுகூட்டலுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும். இவற்றை, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.
தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வெளியாகும்.
தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வரும்.
மாணவர்கள் வரும், 21ம் தேதி பிற்பகல் முதல், தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம்.
மேலும்,www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மாணவர்கள், தேர்வர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.