மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்!
மேற்கிந்திய தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸ்ல் காயம் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ல் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதிலாக சுனில் ஆம்ப்ரிஸ் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் அதிகாரப்பூர்வ தகவல். வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பையில் இதுவரை 6 ஆட்டங்களில் 1 ஆட்டத்தை மட்டுமே வென்ற போதிலும், மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என கருதப்படும் நிலையில், அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக இந்தியாவில் நடைப்பெற்ற IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு சிறந்த ஆட்டக்காரராக விளங்கிய ரஸ்ஸலின் விலகல், இந்திய ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
BREAKING: Andre Russell has been ruled out of the rest of #CWC19 through injury. Sunil Ambris will join the West Indies squad as his replacement.#CWC19 | #MenInMaroon pic.twitter.com/BuhWdjskzq
— Cricket World Cup (@cricketworldcup) June 24, 2019
நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆண்ட்ரே ரஸ்ஸல் மேற்கிந்தியத் தீவுகளுக்காக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதன் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்காக ரஸ்ஸலால் தனது IPL ஜாலத்தை மீண்டும் நிகழ்த்த இயலவில்லை.
முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்யவில்லை, என்ற போதிலும் அவர் 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரஸ்ஸல் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், எனினும் அன்றைய போட்டியில் ரஸ்ஸலால் 15 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
அதேப்போல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரஸ்ஸல் 21 ரன்கள் குவித்தார். பின்னர் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் குவித்தார். பின்னர் இடது மூட்டு காரணம் காரணமாக போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்த அவருக்கு பதிலாக கார்லஸ் ப்ராத்வொயிட் போட்டிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது ரஸ்ஸல் முழுவதுமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 26-வயது இளம் வீரர் சுனில் ஆம்ப்ரிஸ் தொடரில் இடம்மாற்றம் செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சுனில் 105.33 சராசரி கொண்டுள்ளார். இதில் 1 சதம் மற்றும் 1 அரை சதம் அடங்கும்.